India
ரேஷன் கடை ஏலத்தில் போட்டியாளரை சுட்டுக்கொன்ற பா.ஜ.க பிரமுகர் : காப்பாற்ற முயற்சிக்கும் எம்.எல்.ஏ!
உத்தர பிரதேச மாநிலம் பலியாவில் ரேஷன் கடைகள் ஏலத்தில் போட்டியாளரை சுட்டுக்கொன்ற பா.ஜ.க நிர்வாகி, தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவே சுட்டதாக பா.ஜ.க எம்.எல்.ஏ தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் வன்முறைகள் வெகுவாக அதிகரித்துள்ளன. தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், பல்வேறு வன்முறைகளில் பா.ஜ.க-வினர் தொடர்புகொண்டிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில் உள்ள துர்ஜான்பூரில் நியாயவிலைக் கடைகள் ஏலம் விடப்பட்டன. ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட மோதலில், பா.ஜ.க நிர்வாகி தீரேந்தர் பிரதாப் சிங், ஜெய் பிரகாஷ் பால் என்பவர் மீது துப்பாக்கியால் சுட்டார்.
இதில் ஜெய் பிரகாஷ் பால் உயிரிழந்தார். மேலும் ஒருவர் குண்டுவீச்சில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை டி.எஸ்.பி ஆகியோர் முன்னிலையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் அங்கிருந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனால் அங்கிருந்த மக்கள் சிதறியடித்து ஓடினர். சுட்டுக் கொன்ற தீரேந்தர் சிங் அங்கிருந்து உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் நடந்து சென்றுள்ளார். பா.ஜ.க பிரமுகரை தப்பிக்க விட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்தன.
இந்நிலையில், தலைமறைவாகிவிட்ட பா.ஜ.க நிர்வாகி தீரேந்தர் பிரதாப் சிங் பற்றி துப்பு அளிப்பவருக்கு ரூ.75,000 பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தீரேந்தரின் சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்ட தீரேந்தர் பிரதாப் சிங் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேந்திர சிங் குற்றவாளிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இதனால், எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!