India

எனக்கு கொரோனா வந்தால் மம்தாவை கட்டிப்பிடிப்பேன் என்ற பா.ஜ.க தலைவருக்கு வைரஸ் தொற்று!

தனக்கு கொரோனா வந்தா மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடித்துவிடுவேன் எனக் கூறிய பாஜக தேசியச் செயலாளர் அனுபம் ஹஸ்ராவுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பாருபூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தேசியச் செயலாளர் அனுபம் ஹஸ்ரா, மம்தா பானர்ஜியுடன் முகக்கவசங்கள் இல்லாமல் போரிட முடியும் என்றால், கொரோனாவுடனும் நம்மால் முகக்கவசம் இல்லாமல் போராட முடியும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கொரோனாவால் உயிரிழந்தவர்களை அவர்களது நெருங்கிய உறவினர்கள் கூட பார்க்க மம்தா பானர்ஜி அரசு அனுமதிப்பதில்லை. நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் முதலில் மம்தா பானர்ஜியை சந்தித்து கட்டி அணைத்துக் கொள்வேன் எனக் கூறியுள்ளார்.

அனுபம் ஹஸ்ராவின் இந்த பேச்சு பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அவர் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அவதூறு புகார் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், அனுபம் ஹஸ்ராவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது.

இதனையடுத்து, கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கோரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Also Read: சென்னை தெருக்களில் மீண்டும் தகரத் தடுப்புகள்: முறையான கொரோனா தடுப்பு நடவடிக்கை இல்லாததால் மக்கள் அவதி!