India

மாணவர்களுக்கு போதை மருந்து விற்கும் மருந்துக்கடைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - ஐகோர்ட் கேள்வி!

மருந்துச் சீட்டு இல்லாமல் பள்ளி மாணவர்களுக்கு, போதை தரக்கூடிய மருந்துகளை விற்கும் மருந்துக்கடைகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலம் குழந்தைகளுக்கு செலுத்திய நபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, பள்ளி மாணவ - மாணவிகளை போதை பழக்கத்துக்கு அடிமையாக்கும் வகையில், மருந்துச் சீட்டு இல்லாமல், வலி நிவாரணி மாத்திரைகள் சட்ட விரோதமாக விற்கப்படுவது குறித்து வேதனை தெரிவித்தது.

மேலும், போதை தரும் மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் மருந்துக் கடைகள் மீது எத்தனை வழக்குகள் பதிய செய்யப்பட்டுள்ளன எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட மருத்துக்கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதா? எனில் எத்தனை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது? இதுபோல் போதைக்கு அடிமையான மாணவர்கள் எவ்வளவு பேர்? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, இதுகுறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

Also Read: “நிர்வாகத் திறனற்ற முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கோரக்நாத் மடத்திற்கே அனுப்ப வேண்டும்”: மாயாவதி ஆவேசம்!