India

"விவசாயிகளை இரத்தக் கண்ணீர் சிந்த வைக்கும் பா.ஜ.க அரசு" - விவசாய மசோதாக்கள் குறித்து ராகுல் காந்தி வேதனை!

நரேந்திர மோடி அரசு விவசாயிகளை இரத்தக் கண்ணீர் சிந்தவைப்பதாகக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குள்ளாகும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள இரண்டு விவசாய மசோதாக்கள் குறித்த தன் கருத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்திருந்த ராகுல் காந்தி, இந்த மசோதாக்கள் மூலம் விவசாயிகளுக்கு மோடி அரசு மரண தண்டனைக்கான ஆணையை வழங்கியுள்ளதாகவும் முன்னர் தெரிவித்திருந்தார்.

“விவசாயிகள் அவர்கள் நிலத்தில் தங்கத்தை விளைவிக்கின்றனர். ஆனால் மோடியின் அரசு அவர்களை இரத்தம் சிந்த வைத்துள்ளது” என ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாக்களைக் கருப்பு சட்டங்கள் எனவும், விவசாயத்துக்கு எதிரான சட்டங்கள் எனவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஜனநாயகத்துக்கு எதிராக இந்த மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளையும், போராட்டங்களையும் மீறி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் பேசுவதை பொதுமக்கள் கேட்கக்கூடாது என்ற சர்வாதிகார உள்நோக்கத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நேரடி ஒளிபரப்பு செய்யும் ராஜ்யசபா தொலைக்காட்சியின் ஒலி முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read: “இதுவும் ரூ.15 லட்சம் தருவதாகச் சொன்ன வாக்குறுதி போன்றது தான்” - ப.சிதம்பரம் காட்டம்!