India
மோரடோரியம் வழக்கு: தவணை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது - சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவு
கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டு ஊரடங்கால் அனைத்து விதமான தொழில்களும் முடங்கியுள்ளது. ஆகவே, வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மாத தவணை செலுத்த முதலில் மே மாதம் வரை அவகாசம் வழங்கிய ரிசர்வ் வங்கி, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், மாத தவணை செலுத்துவதற்கு மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கியது.
ஆனால், அந்த தவணைகளுக்கான வட்டியை செலுத்துவதில் இருந்து ரிசர்வ் வங்கி விலக்களிக்கவில்லை. மேலும், ஆறு மாத கால தவணைகளும், கடன் தவணை கால இறுதியில் வசூலிக்கப்படும் என்றும், தவணை நிறுத்திவைப்பு காலத்துக்கு உரிய வட்டி கணக்கிடப்பட்டு, வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படும் எனவும் வங்கிகள் அறிவித்தன.
நிறுத்தி வைக்கப்பட்ட தவணைக்குரிய வட்டிக்கும் சேர்த்து, வட்டி வசூலித்தால் அது கூடுதல் சுமையாக அமையுமே தவிர நிவாரணமாக அமையாது எனக் கூறி ஆக்ராவை சேர்ந்த கஜேந்திர சர்மா உள்ளிட்ட பலர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு கடந்த 3ம் தேதி விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வங்கிக்கடனுக்கான வட்டிக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது. கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கான அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, ஆகஸ்ட் 31 ஆம் தேதி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த தவறியவர்கள் மீது இரண்டு மாதங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை செப்டம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்ற போது, ரிசர்வ் வங்கியுடனும் மற்ற வங்கிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்க மத்திய அரசின் சோலிசிட்டர் அவகாசம் கோரினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் இந்த விவகாரத்தில் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் ஒரு திடமான முடிவை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
பின்னர், துறை வாரியாக என்னென்ன சலுகைகள் வழங்க முடியும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவினை இரண்டு வாரத்தில் அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதுவரை கடன் தவணை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்று இடைக்கால உத்தரவிட்டு வழக்கை செப் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Also Read
-
1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041 : வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!