India

ராமர் கோவில் அறக்கட்டளை நிதியில் ரூ. 6 லட்சம் மாயம் - போலி காசோலை மூலம் மோசடி!?

ராமர் கோவில் கட்ட அமைக்கபட்ட அறக்கட்டளையின் வங்கி கணக்கில் இருந்து போலி காசோலை மூலம் ரூ.6 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து, ராமர் கோவில் கட்டுமான பணிகளைக் கவனித்துக்கொள்ள ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டது.

ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளைக்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் நிதியளித்து வருகின்றனர். கடந்த மாதம் வரை ரூ.30 கோடிக்கும் அதிகமாக நிதி வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ராமர் கோவில் கட்டுமானப் பணிகளுக்கு கடந்த மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், அறக்கட்டளையின் வங்கிக்கணக்கில் போலி காசோலை மூலம் பணம் எடுக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

போலி காசோலைகளைப் பயன்படுத்தி மோசடி செய்த மர்மநபர், இரண்டு முறை பணம் எடுத்ததாகவும், மூன்றாவது முறையாக பணத்தை எடுக்க முயன்றபோது, ​​ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா பொதுச்செயலாளர் சம்பத் ராய்க்கு தொலைபேசியில் தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இந்த மோசடி குறித்து அயோத்தி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டு முறை நடைபெற்ற போலி காசோலை மோசடிகளில் ரூ.6 லட்சம் வரை திருடப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

Also Read: ராமர் கோவில் பெயரில் போலியாக நிதி திரட்டி மோசடி : உ.பி-யில் ஒருவர் கைது!