India

அ.தி.மு.க ஆட்சியில் தற்கொலை தலைநகராக மாறிய சென்னை : இந்தியாவில் தற்கொலை பட்டியலில் 2வது இடத்தில் தமிழகம்!

மோடி ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் இதுவரை இல்லாத அளவுக்கு படுமோசமான நிலையை எட்டியுள்ளது. இத்தகைய சூழலில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் நாட்டு மக்களின் நிலைமையும் கவலைக்கிடமாக மாறியுள்ளது.

தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் ஊரடங்கில் ஏற்பட்ட நஷ்டத்தால் பல நிறுவனங்கள் இன்னும் மூடியே கிடக்கின்றன. இதனால் கோடிக்கணக்கான மக்கள் வேலையிழந்து நிர்க்கதியாக நிற்கின்றனர். வறுமை, வேலையின்மை, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு மத்தியில் நோய்த் தொற்று என பல பிரச்னைகளை எதிர்கொள்ளும் நாட்டு மக்கள் மனமுடைந்து தற்கொலை முயற்சிகளில் இறங்கிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவில் தான் அதிகளவு தற்கொலைகள் நிகழ்வதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) சமீபத்தில் தெரிவித்துள்ளது. அதேபோல், இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு லட்சம் பேர் தற்கொலைக்கு முயற்சி செய்வதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 1,39,123 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.

இது கடந்த 2018ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 3.4 சதவீதம் அதிகமாகும். கடந்த 2018 - 2019ம் ஆண்டில் மட்டும் தற்கொலைகள் 0.2% அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு ஆண்டு செப்டம்பர் மாதம் தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள பட்டியலில், இந்தியாவில், 2019ம் ஆண்டு தினமும் 381 பேர் வீதம் ஓர் ஆண்டில் மட்டும் 1,39,123 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

அதேபோல், 2018ம் ஆண்டு 1,34,516 பேரும், 2017ம் ஆண்டு 1,29,887 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிடும்போது தற்கொலைகள் அதிகரித்துள்ளது தெரிகிறது.

இந்தியாவில் தற்கொலை அதிகம் நிகழும் மாநிலமாக மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழகம் மீண்டும் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. மூன்றாவதாக மேற்கு வங்கம் உள்ளது.

இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 18,916 பேரும், தமிழகத்தில் 13,493 பேரும், மேற்கு வங்கத்தில் 12,665 பேரும் மத்திய பிரதேசத்தில் 12,457 பேரும், கர்நாடகாவில் 11,288 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

2019ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டோரில் இந்த 5 மாநிலங்களில் மட்டும் தற்கொலை விகிதம் 49.5 சதவீதமாகும். அதேபோல், மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் சேர்த்து தற்கொலை விகிதம் 50.5 சதவீதம் என அந்த புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

அதேபோல் தமிழத்தின் தலைநகர் இந்தியாவின் தற்கொலை தலைநகராக மாறியிருக்கிறது. இந்தியாவிலேயே அதிக தற்கொலை நடந்த தலைநகராக சென்னை உள்ளது என தேசிய குற்ற ஆவணப் பதிவேடு தெரிவிக்கிறது.

இந்தியாவில் உள்ள 53 நகரங்களில் சென்னையில் தான் தற்கொலை அதிகம் நடந்துள்ளது. அதாவது இந்தியாவில் மொத்த தற்கொலைகளில் சென்னையில் மட்டும் தற்கொலை செய்துகொண்டோரின் எண்ணிக்கை 11 சதவீதமாகும். சென்னையை அடுத்து, டெல்லியில் 2,423, பெங்களூருவில் 1,081, மும்பையில் 1,229 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்தியாவில் சிறந்த மாநிலம் தமிழகம் தான் என தமிழக முதல்வர் பேசும் வேளையில், கடந்த 2 ஆண்டுகளாக தற்கொலை செய்துகொண்டோரில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இதைத்தான் தமிழகம் முன்னேறுவதாக முதல்வர் கூறுகிறாரா அல்லது இந்தியாவின் தற்கொலை தலைநகராக சென்னை மாறியிருப்பதை முதல்வர் குறிப்பிடுகிறாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also Read: இந்தி திணிப்பு : பா.ஜ.கவுக்கு பாடம் புகட்ட #ஹிந்தி_தெரியாது_போடா ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்த தமிழர்கள்!