India

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மோடி அரசு படுதோல்வி: இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 83,883 பேர் பாதிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 26,182,043 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 867,347 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.

பிரேசில், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது. அதேப்போல் 4வது இடத்தில் இருந்த இந்தியா 3வது இடத்திற்குச் சென்றுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 83,883 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில், 1043 பேர் பலியாகியுள்ளார்.

இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38.53 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் 38,53,406 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலியானோர் எண்ணிக்கை 67,376 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய கணக்குப்படி, கடந்த நான்கு நாட்களாக உயிரிழப்பு ஆயிரத்துக்கு மேல் உள்ளது. மேலும், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுவரை 17 லட்சத்து 67 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருபத்தாராயிரம் பேர் பலி ஆகியுள்ளனர். உயிரிழப்பு 1.89% ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில், 76.53% பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

Also Read: “உலகளவில் தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடம்” : உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று!