India
“ஒருதலைப்பட்சமாக புதிய கல்விக் கொள்கையை திணித்திருப்பது அரசமைப்புச் சட்டத்தை மீறுவதாகும்”: CPIM கண்டனம்!
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கையின் பெரும்பான்மையான திட்டங்கள் இந்தி - சமஸ்கிருத மொழிகளைத் திணிக்கும் விதமாகவும், ஏழை எளிய மாணவர்களிடமிருந்து கல்வியைப் பறிக்கும் விதமாகவும் இருப்பதாக எதிர்க்கட்சிகளும், கல்வியாளர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், புதிய கல்விக்கொள்கை மூலம் கல்வியை மத்திய அரசு, மத்தியத்துவப்படுத்தியிருப்பதையும், மதவெறி அடிப்படையில் மாற்றியிருப்பதையும் மற்றும் வணிகமயப்படுத்தி இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அமைச்சரவை, புதியகல்விக் கொள்கையை ஒருதலைப்பட்சமாகத் திணிப்பதற்கும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் பெயரை மாற்றியிருப்பதற்கும் மார்க்சிஸ்ட் கட்சிகடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
கல்வி, நம் அரசமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலில் இருக்கிறது. இப்போது மத்திய அரசு, புதியகல்விக் கொள்கையை பல்வேறு மாநிலஅரசாங்கங்களும் அளித்த ஆட்சேபணைகளையும் எதிர்ப்புகளையும் ஓரங்கட்டிவிட்டு, ஒருதலைப்பட்சமாகத் திணித்திருப்பது, அரசமைப்புச் சட்டத்தை ஒட்டுமொத்தமாக மீறும் செயலாகும்.
இதுபோன்ற வடிவத்தில் வரும் புதிய கொள்கை, நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இவ்வாறு விவாதிக்கப்படும் என்று அரசாங்கம் முன்பு வாக்குறுதி அளித்திருந்தது. இதன் வரைவு, அரசின் நெறிமுறைகளின்படி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், இவற்றின் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் திருத்தங்களை/ஆலோ சனைகளை அளிக்கும் விதத்தில் ஒரு குறிப்பிட்ட கால அளவு நிச்சயித்து தாக்கல் செய்யப்பட வேண்டும். இதில்நாடாளுமன்றம் முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டிருக்கிறது.
புதிய கல்விக் கொள்கையின் வரைவு, பொது வெளியில் வெளியிடப்பட்டிருந்தது. அதன் மூலம் கல்வியுடன் இணைந்த அனைத்துத்தரப்பினரின் ஆலோசனைகளும் அரசுக்கு அனுப்பப்பட்டிருந்தன. பல அறிவுஜீவிகளும் தங்கள் கருத்துக்களை அனுப்பி இருந்தார்கள். ஆயினும் இவை எதுவும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இந்தியக் கல்வி அமைப்பை மிகப்பெரிய அளவில் மத்தியத்துவப்படுத்தும், மதவெறிக்கு உள்ளாக்கும் மற்றும் வணிகமயப்படுத்தும் இந்தப் புதியக் கல்விக் கொள்கை, நாட்டின் கல்வி அமைப்பை ஒழித்துக்கட்டிவிடும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு பாஜக அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக எதிர்க்கிறது. அரசியல் தலைமைக்குழு இதன் அமலாக்கம் தொடங்குவதற்கு முன்னர், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதம் நடத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“Climate Action, Clean Energy ஆகிய இலக்குகளில் தமிழ்நாடு முதலிடம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
பீகாரில் மகளிர் திட்டத்தில் முறைகேடு : ஆண்களின் வங்கி கணக்தில் வரவு வைக்கப்பட்ட பணம்!
-
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி!
-
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் பயன் தருகிறதா? : ஒன்றிய அரசுக்கு தி.மு.க MP கேள்வி!
-
“GST நஷ்டத்திற்கு இழப்பீடு வேண்டும்” : நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமார் MP வலியுறுத்தல்!