India

#EIA2020 தொடர்பாக பேசிய பெண் மீது காழ்ப்புணர்ச்சி காட்டிய சங்கிகள் - இந்தக் கேள்விகளுக்கு பதில் உள்ளதா ?

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி பல சட்டங்களை அவசர அவசராக திருத்தி நிறைவேற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், கடந்த வாரம் ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை விதிகள் -2020’ என்று வரைவு அறிவிக்கையில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

மோடி அரசு கொண்டுவந்துள்ள இந்த திருத்தங்கள், வளர்ச்சியின் பெயரால் அழிவுப் பாதைக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் இருக்கின்றன என பலரும் எதிர்க்கத் துவங்கியுள்ளனர். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 - வரைவு அறிவிக்கைக்கு எதிராக ட்விட்டரில் #scrapEIA2020 என்ற ஹேஸ்டேக் மூலம் தங்களின் கருத்துக்களை பொதுமக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை தொடர்பாக சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆதரவாளர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் பேசியுள்ள போது, பத்ம பிரியா என்ற இளம்பெண் ஒருவர் பேசிய வீடியோ பெருமளவில் வைரலாகியதோடு ட்விட்டரில் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகும் அளவுக்கு வித்திட்டுள்ளது.

எளிய மக்களுக்கு புரியும் படி தெளிவாக பேசியதாக பத்ம பிரியாவிற்கு சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆதரவாளர்கள் என பலரும் தங்களது பாராட்டுக்களையும், ஆதரவையும் தெரிவித்தனர். ஆனால் இதனை பொறுத்துக்கொள்ள முடியாத பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் வழக்கம் போது கருத்துத் தெரிவிப்பவரைக், கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளமுடியாமல் தனிநபர் தாக்குதலில் ஈடுபட துவங்கினர்.

அதற்கு முழுமுதல் காரணமானவர் பா.ஜ.கவில் இருந்து தற்போது பா.ஜ.க ஆதரவாளராக இருக்கும் கல்யாண் என்கிற கல்யாணராமன்தான். பா.ஜ.க-வில் கல்யாணராமன் எவ்வித பொறுப்பிலும் இல்லை என்றும் அவரது கருத்து பா.ஜ.க-வின் கருத்தாகாது என்றும் பா.ஜ.க தலைமை அறிவித்திருந்தது. ஆனால், தொடர்ச்சியாக பா.ஜ.க ஆதரவு கருத்துகளை வெளியிட்டு வரும் கல்யாணராமன் தனது ட்விட்டர் ஹேண்டில் பெயரிலும் BJP என்றே குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கல்யாணராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், “EIA பற்றி பேசிய அந்தப் பெண்ணின் பெயர் மற்றும் விலாசம் மொபைல் நம்பர் ஆகியவை தேவை யாரிடமாவது இருந்தால் என்னுடைய இன்பாக்ஸில் பகிரலாம்” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். பொதுவெளியில் கருத்துத் தெரிவித்த பெண்ணை மிரட்டும் நோக்கில் கல்யாணராமன் செயல்படுவதாகவும் பலரும் குற்றம் சாட்டி பத்ம பிரியாவிற்கு ஆதரவாக உடன் நின்றனர்.

இந்நிலையில் EIA பற்றி பேசி வெளியிட்டுள்ள விடியோவை, தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து பத்ம பிரியா நீக்கினார். இதனையடுத்து அச்சுறுத்தல் காரணமாக வீடியோ நீக்கப்பட்டதாக பலரும் கூறிவந்தனர் வந்தனர்.

இதனையடுத்து நேற்றைய தினம் பத்ம பிரியா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனக்கு அச்சுறுத்தல் இருந்த காரணத்தால் தான் வீடியோவை நீக்கியதாக தெரிவித்தார். மேலும் இந்த அரசாங்கம் அவசரக் கதியாக கொண்டுவந்த ஒரு சட்டத்தைப் பற்றி கருத்துத் தெரிவித்ததற்காக மிரட்டும் போக்கும் என்பது மிகவும் மோசமானது என விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், EIA பேசிய என்னிடம் கருத்தால் எதிர்கொள்ளாமல் எனது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்ப்பது சரியல்ல என்றார். அதுமட்டுமல்லாது, விவாதத்திற்கு என்னை அழைப்பதற்கு பதிலாக இதற்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து பேசிவரும் சூழலியாளர்களை வைத்து முடிந்தால் விவாதம் செய்யுங்கள் என ஆவேசமாக பேசினார்.

மேலும் எனது தனிப்பட்ட தகவலை பொது வெளியில் கேட்ட பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கும்பல்களை பலர் கண்டித்துள்ளனர், அவர்களுக்கு எனது நன்றி எனத் தெரிவித்தார். இறுதியாக பேசிய அவர், இந்த சட்டம் தொடர்பாக பேசுகையில், இந்த அரசாங்கம் மாநில மொழிகளில் சட்டத்தின் அறிக்கையை வெளியிடாமல், ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்டுள்ளதால் மாநில மொழி மட்டுமே தெரிந்த மக்களால் இந்த சட்டம் பற்றி அறிந்துக்கொள்ள முடியாமல் போகும் என குற்றம் சாட்டினார்.

மேலும், இந்த சட்டம் பற்றி பேசுவதற்கு தான் ஒரு சமூக ஆர்வலராகவோ, சூழலியாளராகவோ இருக்கவேண்டிய அவசியம் இல்லை; ஒரு சாதராண பொதுமக்களின் ஒருவராக இருந்தே கேள்வி கேட்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ‘இந்த வேலையெல்லாம் இங்க செல்லாது கல்யாணு’ : சினிமாத்தனமாக பம்மாத்து காட்டியவரை கலாய்க்கும் நெட்டிசன்கள்!