India

“கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்கியதில் ரூ.2,000 கோடி ஊழல்” - பா.ஜ.க அரசை குற்றம்சாட்டும் சித்தராமையா!

கர்நாடகாவில் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ரூ.2 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய சித்தராமையா, “கர்நாடகாவில் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாகக் கடந்த 3-ஆம் தேதி நான் கூறினேன். இது தொடர்பான விவரங்களை அளிக்கும்படி 20-க்கும் மேற்பட்ட முறை தலைமைச் செயலர், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதினேன். ஆனால் யாரும் என் கடிதத்திற்குப் பதில் அளிக்கவில்லை.

17 நாட்கள் கழித்துச் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமலு, நான் கூறியது பொய் எனக் கூறுகிறார். கர்நாடகாவில் கொரோனா சிகிச்சை உபகரணங்கள் வாங்குவதற்காக எடியூரப்பாவின் பா.ஜ.க அரசு இதுவரை ரூ.4,167 கோடி செலவு செய்துள்ளது. இதில் ரூ.2 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது.

தற்போது சந்தையில் உள்ள விலையைக் காட்டிலும் அனைத்து உபகரணங்களும் கூடுதல் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளன.

தரமான தெர்மல் ஸ்கேனர் தற்போது சந்தையில் ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. ஆனால் கர்நாடக அரசு அதனை ரூ.5 ஆயிரத்துக்கு மேல் விலை கொடுத்து வாங்கியுள்ளது. சந்தையில் ரூ. 330-க்கு விற்கப்படும் கரோனா பாதுகாப்புக் கவச உடைகளை, ரூ.2 ஆயிரத்து 112 கொடுத்து வாங்கியுள்ளனர்.

மக்கள் உயிருக்குப் போராடும் சூழலிலும் கொரோனா உபகரணங்கள் வாங்கியதில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்திருக்கும் பா.ஜ.க.வின் இந்தச் செயல் மனிதத் தன்மையற்றது. இதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இந்த முறைகேடு குறித்து உடனடியாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ரூ.900 கோடி மதிப்புள்ள சஞ்சீவானி கடன் கூட்டுறவு சொசைட்டி ஊழல் : பா.ஜ.க அமைச்சரிடம் விசாரணை நடத்த உத்தரவு!