India

“நீதித்துறையின் சுணக்கத்தால் நானும் பாதிக்கப்பட்டேன்” - ஓய்வுபெறும் நாளில் உச்சநீதிமன்ற நீதிபதி உருக்கம்!

தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி நாளை (ஜூலை 19) ஓய்வுபெற உள்ளார். கடந்த 1988-ம் ஆண்டு நீதிமன்றப் பணியில் சேர்ந்து செசன்சு நீதிமன்ற நீதிபதியாக பணியைத் தொடங்கிய ஆர்.பானுமதி 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

2003-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட பானுமதி, பின்னர் 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட ஆறாவது பெண் நீதிபதி ஆர்.பானுமதி ஆவார்.

நீதிபதி ஆர்.பானுமதி நாளை ஓய்வுபெறவிருக்கும் நிலையில், நேற்று கடைசி வேலை நாள் என்பதால் காணொளிக் காட்சி வாயிலாக பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபற்றது. அப்போது அவர் பேசியுள்ளதாவது :

“எனக்கு 2 வயதாக இருந்தபோது எனது தந்தை ஒரு சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார். அவருக்கான இழப்பீடு கேட்டு என் தாய் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். நீதிமன்றம் எங்களுக்குச் சாதகமான தீர்ப்பளித்தாலும், நீதிமன்றத்தின் பல்வேறு குழப்பமான நடைமுறைச் சிக்கல்கள், போதுமான சட்ட உதவிகள் இல்லாததால் அந்தப் பணத்தைப் பெற முடியவில்லை.

நீதிமன்றத்தின் செயல்முறை தாமதத்தால் நான், எனது தாய், எனது இரு சகோதரிகள் பாதிக்கப்பட்டோம். நான் ஓய்வுபெறும் இந்த நாள்வரை அந்த இழப்பீட்டைப் பெறவில்லை. நீதிமன்றப் பணியில் ஏராளமான மலையளவு தடைகள் வந்தன. அவற்றைக் கடந்துதான் வந்துள்ளேன்.

நான் நீதித்துறை பணியில் நுழைந்தபோது வழக்குகள் தொடர்ந்து தேக்கமடைந்துள்ளன என்ற பேச்சு தொடர்ந்து எழுப்பப்படும். தற்போது பல்வேறு அரசுகள் எடுத்துள்ள ஆக்கபூர்வமான பல்வேறு நடவடிக்கைகளால் நீதிமன்றத்தின் பணி சிறப்படைந்துள்ளது.

இளம் வழக்கறிஞர்கள் நிறைய படித்து அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில், அறிவின் ஊற்றாக விளங்கக்கூடிய வழக்கறிஞர்களுக்கு அதிக தேவை இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

Also Read: “ஜோதிகாவை நீங்கள் மிரட்டலாம்! ஆனால் உடுப்பி கோபாலகிருஷ்ணன்கள் உருவாவதை தடுக்கமுடியாது” : நீதிபதி சந்துரு