India

“இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியது” - ஒரு வாரத்தில் ஒரு லட்சம் பேருக்குப் பாதிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 9,904,963 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 496,866 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சம் தாண்டியது. இந்தியாவில் பாதிப்பு மே 19 ம் தேதி ஒரு லட்சத்தை எட்டியது. அது ஜுன் 3 ஆம் தேதி இரண்டு லட்சத்தை எட்ட 15 நாட்களை எடுத்துக் கொண்டது.

பின்னர், 10 நாட்களில் ஜூன் 13 ஆம் தேதி மூன்று லட்சத்தை எட்டியது. அடுத்த எட்டே நாட்களில் ஜூன் 21 ஆம் தேதி நான்கு லட்சத்தை தாண்டியது. இன்று மேலும் குறைந்து 6 நாட்களில் 5 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்த கணக்குகள் ஊரடங்கையும் தாண்டி கொரோனா வேகமாகப் பரவிவருவதையே காட்டுகிறது. இதனிடையே நாடுமுழுதும் கொரோனா சோதனை 80 லட்சத்தை எட்டியதாக ஐ.சி.எம்.ஆர் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,552 ஆக பாதிப்பு உயர்ந்துள்ளது. 384 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளது. இதுவரை, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,08,953 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 15,685 ஆக அதிகரித்துள்ளது.

பிரதமர் மோடி உலக நாடுகளே இந்தியாவின் தடுப்பு நடவடிக்கையை பாராட்டுவதாக சொல்லும் வேலையில், உலகில் மோசமான பாதிப்பை சந்திக்கும் நாடுகளில் பட்டியலில் இந்தியா சென்றிருப்பது பிரதமர் சொன்ன கூற்று பொய் என தெரிவதாக வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த பாதிப்புக்கு மத்தியில் சீனா இந்தியா இடையே எல்லையில் நடந்த மோதல் மற்றோரு பிரச்சனையாக மாறியுள்ளது. மோடி அரசு நிலைமையை உணர்ந்து செயல்பட சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Also Read: “மோடி ஆட்சியில் வரலாறு காணாத பொருளாதார சரிவை இந்தியா சந்திக்கும்” : ஐ.எம்.எப் அதிர்ச்சி தகவல்!