India
“பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி ரூ.2.60 லட்சம் கோடி வசூலிக்க திட்டம்” - மோடி அரசை சாடிய சோனியாகாந்தி!
வைரஸ் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் மத்திய அரசு தளர்வுகளை வழங்கியதை அடுத்து, மக்கள் வாழ்வாதாரத்திற்காக தத்தம் பணிக்கு திரும்பி உள்ளனர். இதனை சாதகமாக்கிக் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 10 நாட்களாக பெட்ரோல், டீசல் மீதான விலையை தினந்தோறும் உயர்த்தி வருகின்றன.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மீதான விலை குறைந்துள்ள போது, எரிபொருட்கள் மீதான விலையும், கலால் வரியும் உயர்த்தப்பட்டிருப்பதற்கு நாடு முழுவதும் உள்ள மக்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான விலையுயர்வை கண்டித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதம் ஒன்றினை பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார்.
அதில், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மார்ச் மாதம் முதல் 10 முறை பெட்ரோல், டீசல் மீதான விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
நாட்டு மக்கள் அனைவரும் நினைத்து பார்க்கவே முடியாத அளவுக்கு பாதுகாப்பற்று கடும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்த சூழலில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருவதை நியாயப்படுத்தவே முடியாது.
மேலும், பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள கலால் வரியின் மூலம் 2.60 லட்சம் கோடி ரூபாயை கூடுதலாக திரட்ட மோடி அரசு திட்டமிட்டுள்ளது என்றும் சோனியாகாந்தி சாடியுள்ளார்.
கொரோனா பாதிப்பால் சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டு, நடுத்தர மக்கள் வருவாய் இன்றி தவித்து வருகின்றனர். இந்த பேரிடர் சூழ்ந்திருக்கும் காலத்தில், மத்திய அரசிடம் குவிந்துள்ள நிதியை பயன்படுத்தி மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டிய தருணம் இது.
மாறாக, மக்கள் மீதே விலையுயர்வை சுமத்தி மேன்மேலும் இன்னல்களை மத்திய மோடி அரசாங்கம் கொடுப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே. பெட்ரொல், டீசல் மீதான விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!