India
“மக்கள் மீது சிறிதளவாவது அக்கறை இருந்தால் பா.ஜ.க அரசு இப்படிச் செய்யுமா?” - கபில் சிபல் தாக்கு!
இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் 90 பைசாவும், டீசல் 4 ரூபாயும் அதிகரித்துள்ளது சாமானிய மக்களை இன்னலுக்கு உள்ளாக்கியுள்ளது.
கடந்த 3 மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சியடைந்து வரும் நிலையிலும், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் காங். மூத்த தலைவர் கபில் சிபல்.
இன்று காணொளிக் காட்சி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்த கபில் சிபல், “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து, கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. ஆனால், இங்கு பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் உயர்த்தி வருகின்றனர். மோடி அரசால் சமானிய மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள்.
பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பலன்களை மக்களுக்கும், நுகர்வோருக்கு வழங்காமல் தொடர்ந்து 7-வது நாளாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சாமானிய மக்களின் நிலையைப் பற்றி சிறிதளவாவது யோசித்திருந்தால் பிரதமர் மோடி, எண்ணெய் நிறுவனங்களுக்கு உதவுவதற்கு பதிலாக, பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருப்பார்.
கடந்த 6 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மத்திய அரசுக்கு ரூ.44 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த மார்ச் 5-ம் தேதியிலிருந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் ரூ.2.50 லட்சம் கோடி மத்திய அரசுக்குக் கிடைத்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.41 ஆக இருந்தது. அப்போது பெட்ரோலிய கச்சா எண்ணெய் பேரல் 106.85 டாலராக இருந்தது. ஆனால், 2020 ஜூன் 12-ம் தேதி டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.75.61 இருக்கிறது.
இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்று 38 டாலர்தான். 106.85 டாலராக கச்சா எண்ணெய் இருந்தபோது பெட்ரோல் விலை ரூ.71.41, இப்போது 38 டாலராக இருக்கும்போது பெட்ரோல் ரூ.75.61.
உலகில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இந்தியாவில் பெட்ரோல், டீசலில் வாட் வரி மட்டும் 69 சதவீதம். அமெரிக்காவில் வாட் வரி 19%, ஜப்பானில் 47%, பிரிட்டனில் 62% தான் இருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!