India

எந்தெந்த வகுப்புகள் எப்போது துவங்கும்? - 6 கட்டங்களாக பள்ளிகளை திறக்க மத்திய அரசுக்கு NCERT பரிந்துரை!

கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்குக்கு பிறகு, தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சிலிடம் (என்.சி.இ.ஆர்.டி) பள்ளிகள் திறப்பு மற்றும் அதன்பின்பு பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கருத்துகளை தெரிவிக்குமாறு மத்திய அரசு கேட்டிருந்தது. இதுகுறித்து அந்த கவுன்சில் மத்திய அரசுக்கு சில பரிந்துரைகளை முன்வைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், பள்ளிகளை 6 கட்டங்களாக திறக்கலாம். முதலில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கும், அதன் தொடர்ச்சியாக ஒரு வாரத்துக்கு பிறகு 9, 10ம் வகுப்புகளுக்கும், 2 வாரங்களுக்கு பின் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கும், 3 வாரங்களுக்கு பிறகு 3 முதல் 5ம் வகுப்புகளுக்கும், ஒரு மாதத்துக்கு பின் 1 மற்றும் 2ம் வகுப்புகளுக்கும் மற்றும் 5 வாரங்களுக்கு பிறகு நர்சரி வகுப்புகளுக்கும் என நடைமுறைப்படுத்தலாம்.

பள்ளிகள் திறந்த பிறகு, ஒரு வகுப்பறையில் 30 முதல் 35 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். மாணவர்கள் ஒருவருக் கொருவர் 6 அடி தூரம் இடையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். வகுப்பறைகளில் ஏ.சி. இருக்கக்கூடாது. அதற்கு பதிலாக கதவுகளும், ஜன்னல்களும் திறந்திருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு மாணவர் பயன்படுத்தும் மேஜை மற்றும் அவர்கள் அமரும் இருக்கையில் சம்பந்தப்பட்ட மாணவரின் பெயரை குறிப்பிட்டிருக்க வேண்டும்.

காலை இறைவணக்கத்துக்கு அனுமதிக்கக்கூடாது. பள்ளிக்கு வெளியே உணவு நிலையங்கள் இருக்கக்கூடாது. மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். அதேபோல், அவர்களுடைய உடல் வெப்பநிலையையும் பரிசோதிக்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் உணவு, குடிநீர் பகிர்ந்து கொள்வதை அனுமதிக்கக்கூடாது. திறந்தவெளியில் வகுப்புகளை நடத்துவது சரியாக இருக்கும்” என தெரிவித்துள்ளது.

5வது கட்ட ஊரடங்கு இன்னும் இரண்டு வாரங்களில் முடிவுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் குறைந்தபாடில்லை. இன்னிலையில் பள்ளிக்கள் திறப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்திருப்பது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “செய்தி வாசிப்பாளர் வரதராஜன் வீடியோவில் குறிப்பிட்டவர் பலி” - இனியும் தொடரவேண்டாம் அரசின் அலட்சியம்!