India

“மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் ஒப்புதல் அளிப்பதா?” : அவசரச் சட்ட விவகாரத்தில் கொதிக்கும் சி.பி.ஐ.எம்!

மத்திய அமைச்சரவை நேற்று (புதன்கிழமை) ஒப்புதல் அளித்துள்ள மூன்று அவசரச் சட்டங்களையும் ரத்து செய்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் முன்மொழிந்துள்ள திருத்தங்கள் நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு மிகவும் அவசியமாக இருந்துவரும் கேந்திரமான வேளாண் பொருள்களின் மீதான விலை நிர்ணயம் மற்றும் போக்குவரத்து குறித்து இருந்து வரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கிவிடுகிறது. இந்த முன்மொழிவுகள் அனைத்தும் ஊக வர்த்தகர்கள் மற்றும் இடைத்தரகர்களால் ஒரு செயற்கையான பற்றாக்குறையை உருவாக்குவதற்கு வழிவகுத்து, நாட்டின் உணவுப் பாதுகாப்பைக் கடுமையாகப் பாதித்திடும்.

மேலும், இந்தத் திருத்தங்கள் மூலம் மாநிலங்களுக்கிடையேயும் மாநிலத்திற்குள்ளேயும் இப்போது விவசாய விளைபொருள்கள் கொண்டு செல்வதற்கு இருந்து வரும் தடைகள் அனைத்தையும் நீக்கிவிடுவதால், வேளாண் விளைபொருள் சந்தைக் குழுக்கள் மின்னணு வர்த்தகத்திற்கான உரிமங்களின் (The Agricultural Produce Market Committees (mandis). Licences for electronic trading) கீழ் உள்ள சந்தைகளுக்கு வெளியேயும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ஒப்பந்த விவசாயத்திற்கு (contract farming) வழிவகுத்திடும். இவை, பெரும் பன்னாட்டு வேளாண் வணிக மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் மிகவும் சுதந்திரமான முறையில் இந்தியாவில் வேளாண் விளைபொருள் மற்றும் சந்தைகளில் நுழைவதற்கு வாசலைத் திறந்துவிடும்.

கொரானா வைரஸ் தொற்று மற்றும் சமூக ஊரடங்கு காரணமாக, வேளாண் நெருக்கடி மிகவும் மோசமாக உள்ள நிலையில் அமைச்சரவையின் முன்மொழிவுகள் வெளிவந்திருக்கின்றன. நம் விவசாயிகளை மிகப்பெரிய அளவில் பாதுகாத்திட வேண்டிய தருணத்தில், இந்த நடவடிக்கைகள் விவசாயிகளை ஒரு நியாயமான குறைந்தபட்ச ஆதார விலைகளில் அவர்கள் உற்பத்தி செய்த விளைபொருள்களைக் கொள்முதல் செய்வதைக் கைவிடுவதற்கு இட்டுச்செல்லும்.

இந்த அவசரச் சட்டங்களின் மூலமாக பயன் அடைவோர், விவசாயிகளையும், நுகர்வோரையும் கசக்கிப் பிழிந்திடும் இடைத்தரகர்கள் மற்றும் வர்த்தகர்களேயாவார்கள். இப்போது பொது விநியோக முறையின் கீழ் கிடைத்து வரும் கொஞ்சநஞ்ச பலன்களையும் இவை முழுமையாக அழித்து ஒழித்துவிடும்.

இந்தத் திருத்தங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு ‘உண்மையான சுதந்திரம்’ என்று வேளாண் அமைச்சர் கூறியிருப்பது அருவருக்கத்தக்கது. 1947 இல் நாடு சுதந்திரம் அடைந்தபோது, விவசாயிகள் சுதந்திரம் அடையவில்லை என்று அவர் கூறியிருக்கிறார். சுதந்திரம் அடைந்தபின் கடந்த பல ஆண்டுகளாக ஆட்சி புரிந்துவந்த அரசாங்கங்களால் உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் நலன்கள் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றன.

மோடி அரசாங்கம் கடைபிடித்துவரும் மூர்க்கத்தனமான நவீன தாராளமயச் சீர்திருத்தங்கள்தான் இந்திய விவசாயிகளை பிரிட்டிஷார் ஆட்சி செய்த காலத்தில் மிகவும் இரக்கமற்ற முறையில் சுரண்டலுக்கு உட்படுத்திய நாட்களைக் கொண்டுவரும் விதத்தில் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.

நாடாளுமன்றம் இவற்றின் மீது விவாதம் நடத்தி, இவற்றை நிறைவேற்றும் வரையிலும், இந்த அவசரச் சட்டங்கள் அனைத்தும் நடைமுறைக்கு வரக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுதியான கருத்தினைக் கொண்டிருக்கிறது. விவசாயம் மீதான நாடாளுமன்ற நிலைக்குழு, இவை சட்டமாவதற்கு முன்பு, இவற்றை உன்னிப்பாக ஆய்வு செய்திட வேண்டும்.

எல்லாவற்றையும்விட முக்கியமான அம்சம், வேளாண்மை என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ், மாநிலப் பட்டியலில் உள்ள ஒன்று. மத்திய அமைச்சரவை தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களைக் கலந்தாலோசிக்காமல் இந்த அவசரச்சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.

இது, நம் அரசமைப்புச்சட்டத்தை முழுமையாக மீறும் செயலாகும். ஒருவேளை நாடாளுமன்றம் இவற்றைப் பரிசீலித்து நிறைவேற்றினாலும்கூட, இவை பின்னர் மாநில சட்டமன்றங்களிலும் நிறைவேற்றப்பட்டாக வேண்டும்.

இவ்வாறு இவை தான்தோன்றித்தனமாக மத்திய அரசாங்கத்தால் திணிக்கப்பட முடியாதவைகளாகும். இந்த அவசரச்சட்டங்களை உடனடியாக ரத்து செய்யவேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

Also Read: “ஒரே நாடு ஒரே வணிகமுறை” - அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல்!