India
“பேரழிவு நேரத்தில் அரசியல் ரீதியாக தொந்தரவு செய்கிறார்கள்” : மோடி, அமித்ஷாவை விளாசும் மம்தா!
மத்திய அரசு பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிங்களில் அம்மாநில அரசுகளை முறையாகச் செயல்படாத விடாமல் தடுப்பது, நிதியைக் குறைப்பது என பல்வேறு நெருக்கடிகளை அளிப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளது. அந்த வகையில் மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கையை கேரளா, தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநில அரசுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு துவங்கியதிலிருந்தே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மோடி அரசை விமர்த்து வருகிறார். இதனால் மத்திய அரசுக்கும் மம்தா பானர்ஜிக்கும் இடையே அரசியல் வார்த்தைப் போர் நடந்து வந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்புக்குக்கிடையே உம்ஃபன் புயல் மேற்கு வங்கத்தை தாக்கியது.
இந்தச் சூழலில் பாதிப்புகளுக்கு உதவாமல் மேற்கு வங்க மாநில அரசின் கொரோனா நடவடிக்கையில் பிரச்னைகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். ஆனால் அந்தக் கடிதத்திற்கு மேற்கு வங்க அரசு பதில் அளிப்பதற்குள் உள்துறை அமைச்சகம் கடிதத்தை பத்திரிகைகளுக்கு அனுப்பியதால் அம்மாநில முதல்வர் மம்தா கோபமடைந்தார்.
இதனால் மீண்டும் அமித்ஷா மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகளை மம்தா பானர்ஜி விமர்த்துள்ளார். இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, “மேற்கு வங்கத்திற்கு தொடர்ந்து மத்தியக் குழு அனுப்பப் படுகிறது. எங்களால் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை என நினைத்தால், இந்த கொரோனா நெருக்கடியை ஏன் மத்திய அரசே கையாளாக்கூடாது? அதனால் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என நான் அமித்ஷாவிடம் கூறினேன்.
பொதுவாக இதுபோன்ற விஷயங்களை நான் வெளிக்காட்டியிருக்க மாட்டேன். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள நிலையைக் கருத்தில் கொண்டு இதனை நான் அமித்ஷாவிடம் தெரிவிக்கிறேன். நீங்கள்தான் ஊரடங்கை அமல்படுத்தினீர்கள். ஆனால் தற்போது ரயில், விமானங்கள் இயங்குகின்றன. இதனால் மக்களின் நினை என்ன ஆகும்? நான் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.
தயவுசெய்து கொரோனா தொற்று பரவுவதைப் பாருங்கள். ஏற்கெனவே 1 லட்சம் பாதிப்பைக் கடந்துள்ளது. இந்தச் சூழலில் மேலும், அரசியல் லாபத்திற்காக இன்னும் சில இடங்களில் பரவவேண்டும் என நினைக்கிறீர்கள். பீகார் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா பரவி வருகிறது. இந்தச் சூழலில் எங்களால் என்ன செய்யமுடியும். மோடி இந்தப் பேரழிவு நேரத்தில் தலையிடவேண்டும் என விரும்புகிறேன்.
மேற்குவங்கத்தை அரசியல் ரீதியாக அவர்கள் தொந்தரவு செய்கிறார்கள். கொரோனா பரவல், புயல் பாதிப்பு ஆகியவற்றை நாங்கள் எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறோம். இதற்கிடையே, வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மும்பை, பீகார் போன்ற பகுதிகளில் ரயில்கள் மூலம் தொழிலாளர்களை மேற்கு வங்கத்துக்கு அனுப்புகிறார்கள்.
ரயில் இயக்கப்படுவது தொடர்பாக மத்திய அரசோ, ரயில்வே நிர்வாகமோ எங்களிடம் அனுமதியோ கருத்தோ கேட்கவில்லை. அவ்வாறு கலந்தாலோசிக்காதது மேற்கு வங்கத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும். இது மத்திய அரசுக்கு தெரியவில்லையா? அரசியல் நோக்குடன் அவர்களுக்கு வசதியானதைப் பலவந்தமாகச் செய்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“பொதுத்துறையில் ஒன்றிய அரசின் பங்குகள் குறைவது ஏன்?” : திமுக எம்.பி.க்கள் முன்வைத்த கேள்விகள் உள்ளே!
-
“தூத்துக்குடிக்கான ‘கடற்பாசி பூங்கா’க்களின் நிலை என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
ஒரே நாளில் 8,46,250 நபர்களுக்கு உணவு வழங்கிய சென்னை மாநகராட்சி! : முழு விவரம் உள்ளே!
-
‘சஞ்சார் சாத்தி’ செயலியை பதிவிறக்க கட்டாயம் இல்லை! : எதிர்ப்புகளை அடுத்து பின்வாங்கிய ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
தண்டையார்பேட்டையில் தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்பு திறப்பு! : முழு விவரம் உள்ளே!