India
“பா.ஜ.க அரசு அறிவித்துள்ள திட்டங்களால் பொருளாதாரம் மீள வாய்ப்பே இல்லை” - பொருளாதார நிபுணர் விளாசல்!
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முறைசாரா துறை மற்றும் தொழிலாளர் ஆய்வுகள் மையத்தின் பொருளாதார பேராசிரியர் சந்தோஷ் கே மெஹ்ரோத்ரா, தற்போதைய தலைகீழ் இடம்பெயர்வு (நகரங்களிலிருந்து கிராமங்களுக்குச் செல்லுதல்) நாட்டை 15 ஆண்டுகளாக பின்னுக்குத் தள்ளிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது :
ஊரடங்கு காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் எவ்வளவு காலம் நீடிக்கும்? புலம்பெயர் தொழிலாளர்களின் வெளியேறுதலை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பொருளாதாரம் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் சார்ந்த நீண்டகால தாக்கத்தை காண்கிறேன். அவர்கள் விரைவில் நகரங்களுக்குத் திரும்புவார்கள் எனக் கூற முடியாது.
அவர்கள் நகரங்களிலிருந்து வெளியேறுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இங்கே மோசமான வாழ்க்கை நிலை, ஒரே இரவில் வாழ்வாதாரம் இழப்பு, சமூக பாதுகாப்பு இல்லை போன்ற காரணங்கள் உள்ளன. பொருளாதாரம் மறுமலர்ச்சி அடையாத நிலையில் அவர்கள் உடனடியாகத் திரும்புவார்கள் என எதிர்பார்க்க முடியாது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்கள், இந்திய பொருளாதாரம் மீள உதவுமா?
உதவாது என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இதற்கு பதிலளிப்பதற்கு முன்பு 2012 மற்றும் 2018 க்கு இடையில் என்ன நடந்தது என்பதைப் பார்க்கவேண்டும்.
2012 வரை ஆண்டுக்கு கிட்டத்தட்ட 7.5 மில்லியன் விவசாயம் சாரா வேலைகள் உருவாக்கப்பட்டு வந்தன. ஆனால் அதன் பின்னர் ஒரு சிறிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. ஆனால் 2004 - 2014 வரை சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி ஆண்டுக்கு 8% ஆக இருந்தது.
2014-2015ல் இரண்டு வருட வறட்சி ஏற்பட்டது. தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக 2014 க்குப் பிறகு மந்தநிலையும் துரிதப்படுத்தப்பட்டது. வேளாண்மை அல்லாத வேலைகளின் வீதம் ஆண்டுக்கு 2.9 மில்லியனாக குறைக்கப்பட்டது.
இப்போது, தொழிலாளர் சக்தியில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நேரத்தில்பொருளாதார நிலை மோசமடைந்துள்ளது. வேலையின்மை விகிதம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது.
பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதால் பொருளாதாரம் மற்றும் வேலையின்மை 2019 வரை தொடர்ந்து மோசமடைந்தது. வளர்ச்சி விகிதம், முதலீட்டு வீதம் மற்றும் ஏற்றுமதியில் தொடர் சரிவுடன் 2020 இல் நுழைந்தோம்.
2018-19 ஆம் ஆண்டில் உண்மையான நிதிப் பற்றாக்குறை மத்திய அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.68% ஆக இருந்தது (CAG) பா.ஜ.க அரசோ 3.4% என்று கூறிக்கொண்டது. பொருளாதார சிக்கல் ஏற்பட்டால் அதைச் சமாளிக்கும் திறன் அரசிடம் இல்லை.
இப்படியொரு சூழலில்தான் கொரோனா தொற்று பொருளாதாரத்தில் மேலும் சிதைவை ஏற்படுத்தியுள்ளது. இப்போது பா.ஜ.க அரசின் திட்டங்களும் பொருளாதாரத்தை மீட்கப் போதுமானதாக இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!