India

1.50 லட்சத்தை எட்டும் கொரோனா.. கடந்த 24 மணிநேரத்தில் 6,535 பேருக்கு பாதிப்பு.. இப்போது விமான சேவை தேவையா?

இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினந்தோறும் ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

நாட்டின் முதல் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட கேரளாவின் திருச்சூர் மாணவி முதல் இது வரையில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 278 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், 60 ஆயிரத்து 706 பேர் குணமடைந்திருந்தாலும் 4 ஆயிரத்து 174 பேர் பலியாகியிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 52,667 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

15 ஆயிரத்து 786 பேர் மட்டுமே குணமாகியுள்ள நிலையில் 1,695 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனையடுத்து, 35 ஆயிரத்து 186 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

17,082 ஆக உள்ள பாதிப்பு எண்ணிக்கையில் 8 ஆயிரத்து 731 பேர் குணமடைந்திருந்தாலும் அவர்களில் பலர் பூரணமாக குணமடையவில்லை. ஐசிஎம்ஆரின் விதிகளின் படி அனுமதிக்கப்பட்ட 10 நாட்களுக்கு பிறகு அறிகுறிகள் ஏதும் இல்லாதவர்களை தமிழக அரசு வீட்டுத் தனிமையில் மட்டுமே வைத்து வருகிறது.

இறப்பு எண்ணிக்கை 119 ஆக உயர்ந்து நாட்டிலேயே குறைவான உயிரிழப்பு விகிதங்களை பெற்றிருந்தாலும் நாளுக்கு நாள் நூற்றுக்கணக்கில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இது மட்டுமல்லாமல், கடந்த 24 மணிநேரத்தில் 146 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 6 ஆயிரத்து 535 பேர் பாதிக்கப்பட்டும், 2770 பேர் குணமடைந்தும் உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசோ உள்நாட்டு விமான சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு மேலும் உயரும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. ஆனால், பொருளாதாரத்தை காரணம் காட்டி மக்களின் உயிருடன் அரசுகள் விளையாடுவது ஏற்கத்தக்கது அல்ல என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also Read: “கொரோனா நோயாளிகளில் நான்கில் ஒருவருக்கு மனநல நோய் தாக்கும்” : மருத்துவ ஆய்வறிக்கை எச்சரிக்கை!