India

“இந்து கோவில் ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கிய இஸ்லாமியர்கள்” : தெலங்கானாவில் நெகிழ்ச்சி சம்பவம்!

உலகம் முழுவதும் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் தீவிரமாகியுள்ளது. இந்தக் கொரோனா பாதிப்பு காரணமாக 3ம் கட்ட ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலில் உள்ளது.

இந்த ஊரடங்கால் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். அரசின் நிவாரணம் போதாத நிலையில் ஏழை மக்கள் உணவின்றி பெரும் துயரங்களைச் சந்திக்கின்றனர்.

ஆனாலும் ஏழைகளின் துயரம் உணர்ந்து பல தன்னார்வலர்கள், மற்றும் அரசியல் கட்சியினர் ஆங்காங்கே பல்வேறு உதவிகளை செய்துவருகின்றனர். அந்த வகையில், தெலங்கானாவைச் சேர்ந்த முஸ்லிம் அமைப்பினர் இந்து கோயிலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிவாரணம் கொடுத்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் கோட்த்தகுடெம் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பினர் ஊரடங்கால் தவிக்கும் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் வழங்கி வருகின்றனர். தினமும் சாலையோர வாசிகள் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு சமைத்து நேரடியாக கொடுக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஏழை மக்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளையும் வழங்கிவருகின்றனர். அந்த வகையில் அதேபகுதியில் உள்ள கோயில் பணியாளர்கள் மற்றும் பூசாரிகளுக்கு நிவாரணம் எதுவும் கிடைக்காமல் சிரமங்களைச் சந்தித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களுக்கு, முஸ்லிம் அமைப்பினர் மளிகைப் பொருட்களை வழங்கியுள்ளனர். பொருள்கள் வழங்கும்போது கோயிலின் வாசலில் நின்றவர்களை உள்ளே வரவழைத்து பொருட்களை பணியாளர்கள் பெற்றுக் கொண்டனர். இதுதொடர்பாக வெளியான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள்தான் இந்தியாவின் மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டுவதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “நோயாளியின் உயிரே முக்கியம்” : தன் உயிரையும் பொருட்படுத்தாது கொரோனா நோயாளியைக் காப்பாற்றிய மருத்துவர்!