India

“கடந்த செமஸ்டர் மதிப்பெண்களை கணக்கிட்டு கல்லூரி மாணவர்களுக்கு மதிப்பெண்” - யு.ஜி.சி வழிகாட்டல்!

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதால், பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளி இறுதித் தேர்வுகள், கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் (UGC) டி.பி.சிங் இன்று ட்விட்டரில் நேரலை மூலம் பேசினார். அப்போது கல்லூரி தேர்வுகள் நடத்துவது குறித்துத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கல்லூரிகள் மே31ம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக பாடங்களை முடித்துவிட வேண்டும் எனவும் ஜூன் 1 முதல் 15 வரை பிராஜக்ட் VIVA, செய்முறைத் தேர்வுகள் போன்றவற்றை ஆன்லைன் மூலமே முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், ஜூன் 15 முதல் 30 வரை கோடை விடுமுறை என்றும், ஜூலை 1 முதல் 15க்குள் இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும், அதன் முடிவுகள் மாத இறுதிக்குள் வெளியிடப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மற்ற மாணவர்களுக்கு ஜூலை 15 முதல் ஜூலை 31 வரை தேர்வுகள் நடத்தப்பட்டு ஆகஸ்ட் 14க்குள் முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என்றும், கல்லூரி வகுப்புகள் ஆகஸ்ட் 1 முதல் தொடங்கப்பட வேண்டும் என்றும், முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் வகுப்புகள் தொடங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜூலை 1 முதல் தேர்வு நடத்தமுடியாத சூழல் எனில் இம்முறை எடுத்த அக மதிப்பெண் 50% + கடந்த செமஸ்டர் மதிப்பெண் 50% எனச் சேர்த்து மதிப்பெண் வழங்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் அறிவுறுத்தியுள்ள இவை வழிகாட்டல்கள் என்றாலும், பல்கலைக்கழகங்களே இதுதொடர்பான இறுதி முடிவை எடுக்கும். எனவே, பல்கலைக்கழகங்களின் அறிவிப்புக்காக மாணவர்கள் காத்திருக்கிறார்கள்.

Also Read: “ஜூலை மாதத்தில் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள்” - யு.ஜி.சி அறிவுறுத்தல்!