India
''புதுச்சேரி சாலைகளை ஓவியமாகத் தீட்டும் முன்னாள் அமைச்சர்'' - ஊரடங்கில் பீறிடும் கலைமனம்!
புதுச்சேரி மாநிலம் மாஹி பகுதியைச் சேர்ந்தவர் இ.வல்சராஜ். முன்னாள் அமைச்சரான இவர் தற்போது ஊரடங்கு நேரத்தில் புதுச்சேரி புஸ்ஸி வீதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தின் மாடியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
புதுச்சேரி மாநிலத்தின் ஒருபகுதியான மாஹியில் இளைஞர் காங்கிரஸ் மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினராகவும், 2006 ஆம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தின் சுகாதார அமைச்சராகவும் பதவி வகித்தவர். கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் சுயேட்சை வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார். தற்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராக உள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 23ந் தேதியன்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, புதுச்சேரியில் உள்ள தனது வீட்டில் இருந்த வல்சராஜ் தனது சொந்த ஊரான மாஹிக்கு செல்ல முடியவில்லை. இந்த ஊரடங்கில் யாரையும் சந்திக்க முடியாமல் புதுச்சேரி வீட்டிலேயே முடங்கியிருந்த வல்சராஜ், நகர வீதிகளை நீர் வண்ண ஓவியமாக வரைந்து வருகிறார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் இ.வல்சராஜ் கூறுகையில், ஊரடங்கில் சொந்த ஊருக்குப் போக முடியாத நிலை ஏற்பட்டது. சில நண்பர்கள் பரிந்துரையின் பேரில் சில புத்தகங்களையும், சினிமா படங்களையும் பார்த்து வந்த எனக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது. நான் ஒரு ஓவியன். இந்த ஊரடங்கை நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் எதாவது செய்யவேண்டும் என்று நினைத்தேன்.
என்னுடைய தூரிகைகள், வண்ணங்கள் எல்லாம் மாஹியில் உள்ளன. இருந்தபோதும் சில நண்பர்களின் உதவியோடு இங்கேயே வண்ணக்கலவைகளையும், தூரிகைகளையும் பெற்றுக்கொண்டேன். வரைவதற்கு மட்டும் தரமான பேப்பர் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் இருப்பதை வைத்து ஊரடங்கின் நினைவாக தெருக்களின் படங்களை வரையத் தொடங்கிவிட்டேன். ஓவியம் வரைவது மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. இந்த ஊடரங்கின் நினைவாக இந்த ஓவியங்கள் இருக்கும்.” இவ்வாறு இ.வல்சராஜ் கூறினார்.
கேரள மாநிலம் தலைச்சேரியில் உள்ள கலைக்கல்லூரியில் படித்த இ.வல்சராஜ் சிறந்த ஓவியர். கடந்த 2010 ஆம் ஆண்டு டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் இவரது ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. அப்போதைய ஜளாதிபதி பிரதிபா பாட்டீல் இக்கண்காட்சியை தொடக்கி வைத்தார். அதில் இவர் வரைந்த சோனியாகாந்தியின் நீர் வண்ண ஓவியம் அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!