India

‘LUDO’ கேமில் தோற்றதால் ‘வெறி’ : மனைவியின் முதுகெலும்பை உடைத்த கணவன் - ஊரடங்கின் போது குஜராத்தில் பகீர் !

கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள போதும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், குஜராத்தின் வதோதரா பகுதியில் ஆன்லைன் விளையாட்டான ‘லுடோ’ கேமில் தோற்கடித்ததால் ஆத்திரமடைந்த கணவர், தன் மனைவியை கடுமையாகத் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வன்முறை தொடர்பாக புகார் அளிப்பதற்காக குஜராத்தில் ‘அபயம்’ என்ற ஹெல்ப் லைன் சேவையை மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஊரடங்கு சமயத்தில், மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால், சிலர் அவ்வப்போது பொதுவெளியில் சுற்றித்திரிந்து வருகின்றனர்.

அந்த வகையில் வெமேலி பகுதியில் வசிக்கும் 24 வயதுடைய பெண் தன் கணவரை வெளியே செல்லவிடாமல் தடுப்பதற்காக ‘லூடோ ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுத்தியுள்ளார். இருவரும் நாள்தோறும் போட்டி போட்டு விளையாடி இருக்கிறார்கள். இதில், தொடர்ந்து அந்த பெண்ணே ஜெயித்து வந்ததால், ஈகோ சீண்டப்பட்ட அந்தக் கணவர், ஆத்திரத்தில் மனைவியை கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.

இதில் அந்தப் பெண்ணின் முதுகெலும்பு உடையும் அளவுக்குச் சென்றிருக்கிறது. இதனையடுத்து, அவசர அழைப்பான அபயம் எண்ணுக்கு புகார் தெரிவித்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.

பின்னர் அபயம் ஊழியர்கள் விசாரித்ததில், மேற்குறிப்பிட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன் பின்னர், அந்தப் பெண்ணிடம் பாதுகாப்பு ஏதும் தேவையா என கேட்டபோது அதற்கு மறுத்த அவர், தனது கணவர் மீது புகாரளிக்கவும் மறுத்துள்ளார்.

மேலும், சிகிச்சை முடிந்த பிறகு கணவருடன் செல்வதற்குப் பதில் பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக விருப்பம் தெரிவித்திருக்கிறார் அந்த பெண். ஆன்லைன் விளையாட்டில் தோற்றதற்காக கட்டிய மனைவியை கடுமையாகத் தாக்கி சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “பண்டமாற்று முறைக்கு மாறிய அரியலூர் கிராம மக்கள்” - பாரம்பரியம் நோக்கி பயணிக்கச் செய்த கொரோனா ஊரடங்கு!