India

“கொரோனா பாதிப்பு 27,500-ஐ தாண்டியது - ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு?” : மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!

சீனாவில் தொடங்கிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகத் தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான நாடுகள் தங்கள் எல்லைகளை மூடி தங்கள் மக்களை பாதுகாத்து வருகின்றன. இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவது நாட்டு மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,500 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 872 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1392 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

அடுத்த இடத்தில் 3031 பேருக்கு தொற்று பாதிப்புடன் குஜராத் மாநிலம் 2ம் இடத்தில் உள்ளது. அங்கு, 151 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 313 பேர் குணமடைந்துள்ளனர். 6-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 1885 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1020 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

பாதிப்புகள் குறையாத நிலையில் இன்று பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் ஒடிசா மாநிலங்கள் மே 3க்கு பின்னரும் ஊரடங்கினை தொடருவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதில் டெல்லி, ஏற்கனெவே, மே 16ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு, அரியானா, இமாச்சலப் பிரதேசம், குஜராத், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் மத்திய அரசின் அறிவிப்புக்கு பிறகு அரசின் வழிக்காட்டுதல் படி முடிவு எடுக்கப்படுவதாக கூறியுள்ளனர். இதனால் அதிகமான மாநிலங்களில் மே 3 தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: ‘ஹாட்ஸ்பாட்’ பகுதிகளாக மாறிய பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் - தடுப்பு நடவடிக்கையில் திணறும் மோடி அரசு!