India

“ஊரடங்கை நீட்டிக்கும் திட்டத்தில் இருக்கிறார் மோடி” - எதிர்க்கட்சித் தலைவர் பேட்டி! #CoronaLockdown

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு வரும் ஏப்ரல் 14ம் தேதி முடிவடைகிறது.

இந்நிலையில் இன்று அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக பிரதமர் மோடியுடனான ஆலோசனைக்குப் பின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்கள ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வரத் தடை விதிக்கப்பட்டு, அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சியின் குழுத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொளிக் காட்சி வழியாக இன்று ஆலோசனை நடத்தினார்.

காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத், தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்துக்குப் பின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது “நாட்டில் ஊரடங்கு காரணமாக வேளாண் துறையில் இருந்து வரும் சிக்கல்கள், விவசாயிகளின் பிரச்னைகள், விளைபொருட்களைக் கொண்டு செல்வதில் உள்ள சிக்கல்கள், உரம், பூச்சி மருந்து கிடைப்பதில் சிக்கல்கள் இருப்பதை காங்கிரஸ் சார்பில் குறிப்பிட்டோம்.

பிரதமர் மோடி பதில் அளித்த வகையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கை நீட்டிக்கவே வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டுள்ள ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து வரும் 11-ம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read: “அரசின் நிதிநிலைக்கும் கொரோனா வந்துவிட்டதா? ஏன் இந்த ஏற்பாடு?” - பா.ஜ.க அரசால் அல்லல்படும் மக்கள்!