India

“கொரோனா பற்றி கவலை இல்லை; ராமர் பார்த்துக்கொள்வார்”: லட்சம் பேர் கூடும் ராம்நவமி விழா நடத்தும் யோகி அரசு!

உலகம் முழுவதும் மக்கள் கொரோனாவால் தங்களின் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். இந்தியாவில் இரண்டாம் கட்டத்தை கொரோனா பாதிப்பு எட்டியுள்ள நிலையில் பல மாநில அரசுகள் மாநிலத்தை முடக்கி, பாதிக்கப்பட்ட மக்களை தனிமைப்படுத்தி வருகின்றன.

மேலும் மக்கள் பொது இடங்களில் கூடாத வகையிலும் பார்த்து வருகின்றனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எழுந்துள்ள நிலையில் உ.பியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு அதனை சீர்குலைக்க முடிவு செய்துள்ளது.

லட்சக்கணக்கில் பகத்தர்கள் கூடும் ராம் நவமி விழாவை இன்னும் சிறப்பாக நடத்தப்போவதாக கூறிவருகிறது. இதனால் மக்கள் மீண்டும் அச்சமடைந்துள்ளனர்.

உத்திர பிரதேசத்தில் ராம் நவாமி மேளா மார்ச் 25 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் நாடுமுழுவதும் பல லட்சம் மக்கள் மக்கள் பங்கேற்பது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததால் வெகுசிறப்பாக நடத்த அம்மாநில அரசு முடிவு செய்தது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவியதையடுத்து நிகழ்வை ரத்து செய்யுமாறு அயோத்தியின் தலைமை மருத்துவ அதிகாரி அரசிடம் கோரியிருந்தார். தலைமை மருத்துவ அதிகாரி கன்ஷ்யம் சிங் "இவ்வளவு மக்கள் திரண்டால் அனைவரையும் சோதனை செய்யவேண்டும்; ஆனால் அந்த அளவிற்கு வசதிகள் தற்போது இல்லை" என்று கூறியுள்ளார்.

ஆனால் உ.பி அரசு, அதிகாரிகளின் பேச்சுகளுக்கு செவிசாய்க்காத நிலையில் வேறுவழியின்றி தங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மருத்துவக் குழு செய்து வருகிறது.

அரசின் இந்த முடிவுக்கு ராமர் கோயில் கட்டுமானக் குழுவின் உறுப்பினரான அயோத்தி மாவட்ட நீதவான் அனுஜ்குமார் ஜாவும் ஆதரவு அளித்துள்ளார். இதுதொடர்பாக ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், “இது பாரம்பரியத்தின் ஒரு பகுதி. அதனால், ராம நவமி மேளாவை ரத்து செய்ய எந்த திட்டமும் இல்லை. மாவட்ட நிர்வாகம் கடந்த ஒரு மாதமாக முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அதுமட்டுமின்றி, "பக்தர்களுக்கு எந்தத் தீங்கும் வராது" என்பதை ராமர் உறுதி செய்வார்” எனத் தெரிவித்தார்.

யோகி அரசின் இந்த முடிவு இந்துத்வா மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் மக்கள் கலக்கம் அடையத் துவங்கியுள்ளனர்.

Also Read: #Corona : "எங்க குடும்பம் என்ன செய்யும்?" - வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கூலித் தொழிலாளர்கள் குமுறல்!