India

“வரிவிதிப்பின் மூலம் மக்கள் பணத்தை மோடி - ஷா அரசு கொள்ளையடிக்கிறது” : காங்கிரஸ் குற்றச்சாட்டு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிகாரம் கொடுத்த மோடி அரசு, கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியின்போது பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

அதன் விளைவாக பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் உயர்த்தப்பட்டு வருகிறது. பொதுமக்களை நேரடியாக தாக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளதால் நடுத்தர, ஏழை மக்கள், வியாபாரிகள் என பலதரப்பட்ட மக்களும் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக, மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டில் வர்த்தம், தொழில் வளர்ச்சி, முதலீடுகள், வேலைவாய்ப்புகள் மட்டுமன்றி கொரோனா பாதிப்பு என அனைத்துத் துறைகளும் முடங்கி போயுள்ளன.

இந்த சூழலில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.3 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மீதான சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ 8 வரையும், டீசல் மீதான கலால் வரி 4 ரூபாய் வரையும் உயர்த்தப்பட்டதாக நேற்றைய தினம் அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த வரி உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அஜய் மாகென், “பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதல் பெட்ரோலியப் பொருட்களுக்கான கலால் வரியை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. குறிப்பாக அதிகபடியான வரிவிதிப்பின் மூலம் மக்கள் பணத்தை மோடி - அமித்ஷா அரசு கொள்ளையடிக்கிறது.

கடந்த 6 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை 50 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து விட்டது. ஆனாலும், பா.ஜ.க அரசின் மக்கள்விரோத கொள்கைகளால் பெட்ரோலியப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைப்பின் பலன் மக்களுக்கு சென்றடைய வேண்டும்.

பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி காஸ் ஆகியவற்றின் விலை 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை குறைக்கப்பட வேண்டும். கடந்த 2014ம் ஆண்டு முதல் பெட்ரோலியப் பொருட்களுக்கு உயர்த்தப்பட்ட கலால் வரி வாபஸ் பெறப்பட்டு, பெட்ரோலியப் பொருட்கள் ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுக்கிறது” என தெரிவித்தார்.

Also Read: “பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாயாக உயர்த்திய மோடி அரசு”-கலக்கத்தில் வாகன ஓட்டிகள்!