India

“செல்போன் கட்டணங்கள் 10 மடங்கு அதிகரிக்கும்?” - நிதி ஆயோக் CEO அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி!

மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கான கட்டணங்களை நிர்ணயிப்பது குறித்து, அந்தந்த நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

பா.ஜ.க அரசின் ஆதரவோடு தொலைத்தொடர்புத் துறையில் களமிறங்கிய ஜிடோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து பிற நிறுவனங்களையும் நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கியது.

கடுமையான போட்டி காரணமாக ஒவ்வொரு நிறுவனமும் செல்போன் கட்டணங்களை வெகுவாகக் குறைத்து தங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை பெறவும் முயற்சித்து வந்தன.

இதையடுத்து, தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக, கட்டண விவகாரத்தில் அரசு தலையிட வேண்டும் என தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்தன.

இதுகுறித்து பரிசீலித்த நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த், “தொலைபேசி அழைப்புகள் மற்றும் மொபைல் டேட்டாக்களுக்கு, தொலைபேசி நிறுவனங்கள் குறைந்தபட்ச அடிப்படை விலை நிர்ணயம் செய்து கொள்ள அனுமதி அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, தொலைபேசி கட்டணங்கள், தற்போதைய விலையை விட 5 முதல் 10 மடங்கு உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் மிஸ்டு கால்களுக்கும் கட்டணம் வசூலிக்க பரிசீலனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

வோடஃபோன் ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களை ஜியோ நிறுவனம் பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது ஜியோவின் திட்டமே எனக் குற்றம்சாட்டப்படுகிறது.

Also Read: “அழிவின் விளிம்பில் வோடஃபோன்” : ஜியோ வல்லாதிக்கத்தால் இந்திய பொருளாதாரத்திற்கு நேரும் ஆபத்து!