India

தாயைக் கொன்றுவிட்டு அந்தமானுக்கு சுற்றுலா சென்ற மகள்... விசாரணையில் வெளிவந்த ‘திடுக்’ தகவல்கள்!

தனது தாயைக் கொன்றுவிட்டு அந்தமானுக்கு ஆண் நண்பருடன் சுற்றுலா சென்ற மகளை பெங்களூரு போலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா (33) ஐ.டி துறையில் மென்பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் பணிமாறுதல் பெற்று அங்கு செல்ல இருப்பதாக குடும்பத்தினரிடம் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி, தனது அறையில் உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தபோது, அவரது தாய் நிர்மலா மற்றும் சகோதரர் ஆகியோரிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் கத்தியால் தாய் மற்றும் சகோதரரை குத்திவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார் அம்ருதா.

இந்தச் சம்பவத்தில், அம்ருதாவின் தாய் நிர்மலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த அவரது சகோதரர் இதுகுறித்து போலிஸாரிடம் புகாரளித்தார். புகாரை விசாரித்த போலிஸார், அம்ருதாவை தேடியபோது, அவர் உடனடியாக அவரது நண்பர் ஸ்ரீதர் ராவுடன் இணைந்து அந்தமான் சென்றதைக் கண்டுபிடித்துள்ளனர்.

Amrutha

அந்தமான் போலிஸார் உதவியுடன் அங்கு சென்ற பெங்களூரு போலிஸார், அம்ருதா மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். அம்ருதாவிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசாரணையில், அம்ருதாவின் தந்தை நுரையீரல் புற்றுநோயால் 2013ல் இறந்துள்ளார். சிகிச்சைக்காக கடன் பெற்றதை, திரும்பச் செலுத்தாததால் கடன் தொல்லை இருப்பதாகவும், அதனால், அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த அம்ருதா, தாயையும், சகோதரரையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்துள்ளார். அதன்படி, கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முன்னதாக நண்பருடன் சுற்றுலா செல்ல விரும்பி அந்தமான் சென்றுள்ளார். ஆனால், அதற்குள் போலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

Also Read: #CAA ஆதரவு பேரணிக்காக வைக்கப்பட்ட பேனரில் கொலை மிரட்டல்: மகாராஷ்டிராவில் இந்துத்வா கும்பலின் வெறிச்செயல்!