India

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட இவ்வளவு குறைவா?- அதிர்ச்சி தகவல்!

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள்.

மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ, ஏஞ்சலின் ஸ்ருதி ஆகியோர் கடந்த ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது மத்திய அரசு. இதனை எதிர்த்து குரல் எழுப்ப வேண்டிய மாநில அரசோ மவுனம் சாதித்து வருகிறது.

அதுமட்டுமின்றி, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதாக்கள், நிராகரிக்கப்பட்டு 2017ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதியே தமிழகத்துக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அதனை மறைத்து பா.ஜ.க.,விற்கு தனது விசுவாத்தைக் காட்டிவிட்டு தமிழக மாணவர்கள் நலன்களை பறித்துள்ளது எடப்பாடி அரசு.

மாநிலம் முழுவதும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு நீட் தேர்வை எதிர்கொள்ள கற்றுக் கொடுப்பதாக அ.தி.மு.க அரசு தம்பட்டம் அடித்தது. ஆனால் கடந்தாண்டு அ.தி.மு.க அரசு சார்பில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்ற 19,000 மாணவர்களில் ஒருவருக்கு கூட மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை என அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் இருந்து 2020ம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 2019ம் ஆண்டைவிட 17 சதவீதம் குறைந்துள்ளதாக மற்றொரு அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பான தகவலை, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதில், 2020ம் ஆண்டுக்கான நீட் தகுதித் தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து 1,17,502 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 2019ம் ஆண்டு 1,40,000 பேர் தமிழகத்திலிருந்து விண்ணப்பித்திருந்தனர்.

இந்த விவரங்களுடன் ஒப்பிடும்போது நீட் தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 17% குறைந்துள்ளது. குறிப்பாக, 2016ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் நடப்பாண்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக கல்வியாளர்கள் கூறுகையில், “கட் ஆஃப் மதிப்பெண் உயர்வினால் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் மிகுந்த சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

அதனால் 12ம் வகுப்பு முடித்த பிறகு நீட் தேர்வை எதிர்கொள்வதற்காக ஓராண்டு ஒதுக்கவேண்டிய சூழலுக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

உதாரணமாக, 2019ம் ஆண்டில் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதி 4,202 மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். அதில் 70 சதவீதம், அதாவது 2,916 மாணவர்கள் பழைய மாணவர்கள் என்ற தகவல் உள்ளது” எனக் கூறியுள்ளனர்.

Also Read: “நீட் தேர்வில் பாஸாகியிருந்தால் இப்போது படிக்கப் போயிருப்பேன்” தற்கொலை செய்த மாணவியின் உருக்கமான கடிதம்!