India

'வசூல்ராஜா MBBS' பாணியில் காப்பி அடித்த நபர் : பீகார் காவலர் தேர்வின்போது நூதனச் செயல்!

பீகார் மாநிலத்தில் காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முசாஃபர் நகரில் நடைபெற்ற எழுத்துத் தேர்வின்போது தேர்வர் ஒருவர் காப்பி அடித்து தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனஞ்செய் குமார் என்ற நபர், முனகிக்கொண்டே தேர்வு எழுதியிருக்கிறார். இதனை தேர்வு அறையில் இருந்த அதிகாரி கவனித்துள்ளார். அதன் பிறகு அவரை சோதிக்க முற்பட்ட போது தொலைபேசியில் இயர்ஃபோனை இணைத்து அதன் மூலம் விடைகளை கேட்டு எழுதியுள்ளார்.

முன்னதாக, தான் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதற்காக தனஞ்செய் அந்த இயர்ஃபோனை காதில் திணித்ததால் வலி ஏற்பட்டு துடித்துள்ளார். அதன் பின்னர் தேர்வறையில் இருந்து வெளியேற்றப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது.

போலிஸார் பரிசோதித்ததில், தனஞ்செய் குமார் இயர்ஃபோனை தனது முதுகில் டேப் போட்டு ஒட்டி வைத்து காதில் செருகி விடைகளை கேட்டு பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது. பின்னர் இயர்ஃபோனை காதில் அழுத்தியதால் ஏற்பட்ட வலிக்கு சிகிச்சை அளிக்க அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார் என முசாஃபர்நகர் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, தமிழகத்தின் விழுப்புரத்தில் நடைபெற்ற சப் இன்ஸ்பெக்டருக்கான எழுத்துத் தேர்வின் போது மணி என்ற காவலர் துண்டுச் சீட்டு வைத்து காப்பி அடித்து எழுதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அவரை சோதித்ததில் சட்டம் தொடர்பான 4 பக்க ஜெராக்ஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் வெளியேற்றப்பட்டதோடு 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுதவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Also Read: 2 மையங்களில் தேர்வு எழுதியவர்கள் டாப் 100 பட்டியலில் வந்தது எப்படி?- முறைகேடு புகார் பற்றி TNPSC விசாரணை!