India

அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க அம்பேத்கருக்கு உதவியதே பிராமணர்தான் - குஜராத் பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு!

இந்து மதத்தின் மூலம் அரசியல் லாபம் பார்த்து அதிலும், குறிப்பிட்ட சமுதாயமான ஆரியர்களை மட்டுமே முன்னிலைப்படுத்தும் ஆர்.எஸ்.எஸின் கொள்கைகளை பேணிக்காக்கும் முக்கிய பொறுப்பில் உள்ள பாஜகவினர் அதனை தொடர்ந்து செவ்வென செய்து வருகின்றனர்.

அந்த வகையில், நோபல் பரிசு வென்ற 9 இந்தியர்களில் 8 பேர் பிராமணர்கள் தான் எனவும், அரசியலைமைப்பு சட்டத்தை இயற்றியது அம்பேத்கர் இல்லை, பிராமணர் தான் எனவும் குஜராத் சட்டசபை சபாநாயகரும், அம்மாநில பாஜக தலைவருமான ராஜேந்திர திரிவேதி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குஜராத் மாநிலம் அடலாஜ் நகரில் மெகா பிராமின் வர்த்தக உச்சி மாநாடு நடைபெற்றது. இதன், தொடக்க விழாவில் அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி, சட்டமன்ற சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் திரிவேதி, “அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர் அம்பேத்கர் என்று நாம் கூறுகிறோம். ஆனால், அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியது உண்மையில் அம்பேத்கர் இல்லை, அம்பேத்கருக்கு முழுமையாக உதவியவர் ஒரு பிராமணர். அவரது பெயர் பெனகல் நரசிங்க ராவ் (பி.என்.ராவ்). 1949ம் ஆண்டு நவம்பர் 25 நடந்த அரசியலமைப்பு சபையில் இதனை அம்பேத்கரே குறிப்பிட்டுள்ளார்.

60 நாடுகளின் அரசியலமைப்பு சட்டத்தை ஆராய்ந்த பிறகே, நமக்கான அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அதேபோல. இதுவரையில் இந்தியாவைச் சேர்ந்த 8 பேர் நோபல் பரிசு வென்றிருக்கிறார்கள், அதில் 7 பேர் பிராமணர்கள் தான். சமீபத்தில் நோபல் வென்ற அபிஜித் பானர்ஜி-யும் பிராமணர்தான்.

மேலும், டெல்லியில் நடைபெற்ற தீ விபத்தில் 11 பேரை காப்பாற்றிய ராஜேஷ் சுக்லா கூட ஒரு பிராமணர்தான். தேச நலனுக்காக பிராமணர்கள் பேசுவதாலேயே அவர்கள் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்கின்றனர்.

பிராமணர்கள் வித்தியாசமான டி.என்.ஏக்களை கொண்டவர்கள். உலக மக்கள் அனைவரையும், ஆசிர்வதிக்கும் பிறப்புரிமையை பெற்றவர்கள் என ராஜேந்திர திரிவேதி பேசினார்.

Also Read: “மனிதனை வழிநடத்துவது ‘மதம்’தான்” - பா.ஜ.க செயல் தலைவர் ஜே.பி.நட்டாவின் சர்ச்சை பேச்சு!