India

“உங்களுடைய வேலையை மட்டும் பார்த்தால் போதும்” - ராணுவத் தளபதி ராவத்துக்கு ப.சிதம்பரம் பதிலடி !

நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ராணுவ தளபதி பிபின் ராவத் கடந்த வாரம் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது, “தேவையற்ற வழியில் மக்களை வழிநடத்திச் செல்பவர்கள் தலைவர்கள் அல்ல, வன்முறையை நோக்கி நகர்த்திச் செல்வது தலைவருக்கு உகந்தது அல்ல” என அரசியல் கட்சித் தலைவர்களை சாடி பேசினார்.

ராணுவ தளபதியின் இந்த பேச்சு போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும், அரசியல் கட்சித் தலைவரையும் கொச்சைப்படுத்தி பேசுவதாக இருந்தது. ராணுவத் தளபதி அரசியல் விவகாரங்களில் தலையிடுவது உகந்தது அல்ல, மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், கேரளாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, “இந்திய அரசியலமைப்பிற்கு ஏற்படும் கடுமையான ஆபத்தை புரிந்துகொண்டதால்தான், மாணவர்களும் இளைஞர்களும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்க முடிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், இதனை மறைக்க மத்திய அரசை ஆதரித்து பேச வேண்டும் என்று போலிஸ் டி.ஜி.பி.க்கள் மற்றும் ராணுவ தளபதி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர். இது எவ்வளவு பெரிய அவமானகரமான செயல்.

இதன் மூலம் ராணுவ தளபதி ராவத்திடம் நான் கேட்டுக் கொள்வது எல்லாம், உங்கள் வேலையை மட்டும் நீங்கள் பாருங்கள். அதில் மட்டும் கவனம் வைத்திடுங்கள்; அரசியலில் இருப்போர் என்ன செய்யவேண்டும் என அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்” என தெரிவித்தார்.