India

“பாகிஸ்தானுக்கு போ.. இல்லேன்னா சுடுகாட்டுக்குப் போ” - முஸ்லிம் பெரியவர் வீடுபுகுந்து கொள்ளையடித்த போலிஸ்!

பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்களை ஒடுக்க அரசும், காவல்துறையும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரில் போராட்டம் நடந்தது. இஸ்லாமியர்களும் திரளாகப் பங்கேற்று ஊர்வலம் சென்று குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இஸ்லாமிய பெரியவரான 73 வயதான ஹாஜி ஹமித் ஹசன் என்பவர் இந்தப் போராட்டத்தில் முன்னின்று பங்கேற்றார். போராட்டத்தில் பங்கேற்றவர்களைக் குறிவைத்தது பா.ஜ.க அரசின் ஆணைப்படி நடக்கும் போலிஸ்.

முசாபர் நகரில் ஊர்வலம் முடிந்து 2 நாட்களுக்குப் பிறகு, போலிஸார் பெரியவர் ஹாஜி ஹமித் ஹசனின் வீட்டை சுற்றி வளைத்துள்ளனர். உள்பக்கமாக பூட்டியிருந்ததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்த போலிஸார் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

மேலும், ஹாஜி ஹமித் ஹசனின் பேத்தி திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் பணம், நகை ஆகியவற்றை பீரோவில் இருந்து கொள்ளையடித்துள்ளனர். அவரது குடும்பத்தார் எவ்வளவோ தடுத்தும், அவர்களைத் தாக்கிவிட்டு கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்.

மேலும், ஹாஜி ஹமித் ஹசனை தாக்கி, “நீ ஒரு முஸ்லிம். நீ பாகிஸ்தானுக்கு போகணும்.. இல்லேன்னா சுடுகாட்டுக்கு போகணும்” என மிரட்டியுள்ளனர். மேலும், அவரது மகனிடம் ஒரு துப்பாக்கியைக் கொடுத்து, அதை புகைப்படம் எடுத்துக்கொண்டு, ஆயுதம் வைத்திருப்பதாகக் கூறி அவரைக் கைது செய்துள்ளனர். போலிஸாரால் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது மகன் இதுவரை வீடுதிரும்பவில்லையாம்.

இதுகுறித்து பேசியுள்ள ஹாஜி ஹமித் ஹசன், “என் பேத்திக்கு வரும் பிப்ரவரி மாதம் கல்யாணம் என பத்திரிகையை காட்டியும் அவர்கள் நகையைத் தரவில்லை. பெண் குழந்தைகளை காப்போம்னு பிரதமர் மோடி சொல்றார். ஆனால் பெண்களின் நிலை பா.ஜ.க ஆட்சியில் இப்படி இருக்கே?” என வேதனை தெரிவித்துள்ளார்.

Also Read: ‘போராட்டத்தில் ஈடுபட்ட 498 அப்பாவி மக்களின் சொத்துகள் பறிமுதல்?’ : பா.ஜ.க அரசின் ‘பாசிச’ முடிவு!