India

அ.தி.மு.க அமைச்சருக்கே NRC பயம்-யார் என்ன ஆனாலும் எடப்பாடிக்கு கூட்டணி தர்மம்தான் முக்கியம் அப்படித்தானே?

பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள சிறுபான்மையின மக்கள் விரோத குடியுரிமை திருத்தச் சட்டத்தை பல மாநில முதல்வர்களும், தங்கள் மாநிலங்களில் அமல்படுத்தமாட்டோம் எனக் கூறி வருகின்றனர். ஆனால், தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தது.

மேலும், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுவோர், இஸ்லாமிய மக்களிடையே வதந்திகளைப் பரப்பி வருவதாகவும், குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இந்திய மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிவித்து வருகிறார்.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக தொழிலாளந் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், முஸ்லிம்களிடையே பேசும் ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவியது.

அதில், இஸ்லாமியர் ஒருவர் அமைச்சரிடம், “ஏழைகளிடம் ஆவணங்கள் இல்லாதபோது அவர்கள் எதைக் காட்டி அரசாங்கத்திடம் நிரூபிப்பார்கள்?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர், “ரேஷன் கார்டு அல்லது ஆதார் அட்டை குடியுரிமை அடையாளமாகக் கருதப்படும்” என்று கூறினார்.

ஆனால், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் ஆகியவை குடியுரிமை ஆவணங்களாக கருதப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள நிலோபர் கபீல், “நான் ஒரு முஸ்லிம். எனக்கும் கூட குடியுரிமை சட்டம் குறித்து அச்சம் இருக்கிறது. அதை மறுக்கமுடியாது. என்.ஆர்.சி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் முஸ்லிம்களின் அச்சம் குறித்து தெரிவித்தேன்.

என்.ஆர்.சியில் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். அதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதுபற்றி எந்த கவலை வேண்டாம் என எனக்கு உறுதியளித்தார்.” எனத் தெரிவித்துள்ளார்.

மக்களிடையே எதிர்க்கட்சிகளும், போராட்டக்காரர்களும் வதந்தியைப் பரப்பி அச்சத்தை விதைப்பதாகக் கூறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சிறுபான்மையின அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்?

Also Read: #CAB2019 : இதைவிட எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை யாராலும் கேவலப்படுத்த முடியாது மிஸ்டர் எடப்பாடி !