India

ஜி.எஸ்.டி வருவாய் இழப்பு : மாநில அரசுகளுக்கான இழப்பீட்டை குறைக்க மத்திய அரசு திட்டம்!

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை ஏற்றுக் கொண்டதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிகட்டும் வகையில் 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதன்படி 2019-20ம் ஆண்டு மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த வாரம் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கடந்த 4 மாதங்களாக ஜி.எஸ்.டி. வசூல் குறைந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பொருளாதார மந்தநிலை காரணமாக ஏற்கனவே பல பொருட்களின் வரிகள் குறைக்கப்பட்டதால், அதற்கேற்ப வரி வசூலும் பாதிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், வரி வசூல் குறைந்துள்ளதால், நடப்பு நிதியாண்டில் மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய தொகையில் 63 ஆயிரம் கோடி ரூபாயை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டமிட்டுள்ளதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் மாநில அரசுகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இழப்பீடு தொகை வழங்காவிட்டால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்படும்.

இதனால் எதிர்வரும் மாநில நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது மேற்குறிப்பிட்ட மாநில அரசுகளுக்கு நிதி நெருக்கடி ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.

இதனால், பேரிடர் காலத்தின் போது நிவாராணம் வழங்குவது, ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவது போன்றவற்றில் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.