India
#CAB2019 : போலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 2 இளைஞர்கள் பலி - 2 நாட்களில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், தி.மு.க, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே, அசாம், திரிபுரா மாநிலங்களில் மக்கள், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடாது என வலியுறுத்தி ஒருவார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியதை அடுத்து, அதைத் திரும்பப் பெற வலியுறுத்தி அசாம், திரிபுராவில் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதனிடையே, அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு போலிஸார் மற்றும் துணை ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். முன்னதாக 3 பேர் இந்த போராட்டத்தின் போது போலிஸாரின் பதில் தாக்குதலால் உயிரிழந்தாக கூறப்பட்டது
இந்நிலையில், தீபஞ்சல் தாஸ் என்ற இளைஞரும், 17 வயது மாணவர் ஒருவரும் இதில் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. தீபஞ்சல் தாஸ் என்ற இளைஞர் சாய்கானில் வசித்து வருகிறார். அவர் கவுகாத்தியில் உள்ள சைனிக் பவனில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஒருவாரமாக நடைபெறும் குடியுரிமை மசோதா எதிர்ப்புப் போராட்டத்தில் பணி முடிந்தபின்னர் கலந்துகொண்டுவிட்டு பின்னர் இரவு வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதனிடையே இரண்டு நாட்களுக்கு முன்பு லச்சித் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ளார். அவர் அங்கு செல்லும்போதே, போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலிஸார் தடியடி நடத்த ஆரம்பித்துள்ளனர். பின்னர் எதிர்ப்பு போராட்டம் தீவிரம் அடைந்ததால் போலிஸார் தூப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், குண்டடிப்பட்ட தீபஞ்சல் சம்பவ இடத்திலேயே மயங்கிவிழுந்துள்ளார்.
அப்போது அவரது நண்பர் சச்சினும், அருகில் இருந்த சில போராட்டக்காரர்களும் இணைந்து தாஸ் தீபஞ்சலை மீட்டு கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீபஞ்சலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்தே, கவுஹாத்தியில் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 வயது மாணவர் இறந்தார். இந்த சம்பவம் வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் தலைநகர் அசாமில் உள்ள ஹடிகான் பகுதியில் நடந்தது. பலியான மாணவர் சாம் ஸ்டாஃபோர்டு என பின்னர் தெரியவந்தது. அவர் தனது குடும்பத்துடன் ஹடிகான் பகுதியில் வசித்து வந்தார்.
மாணவர் இறந்த சம்பவம் குறித்து ஹடிகான் பகுதியில் வசிக்கும் நூருல் ஹோக் கூறுகையில், “ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில நேரத்திலேயே இந்த சம்பவம் நடந்தது. சி.எ.பி எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியில் நானும் அவரும் பங்கேற்றோம். அப்போது போலிஸார் திடீரென தூப்பாக்கிச் சூடு நடத்தினர். சிறிது நேரத்தில் திரும்பிப் பார்க்கும்போது போலிஸாரின் புல்லட் அவரது கழுத்தில் தாக்கியது, சம்பவ இடத்திலேயே இறந்தார்” என்று கூறினார்.
கவுஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனை நடத்தி, அனைத்து நடைமுறைகளையும் முடித்தபின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் பாதுகாப்பு அதிகாரிகளுடனான மோதல்களின் போது கடந்த 48 மணி நேரத்தில் கவுஹாத்தியில் 50 க்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.3 ஆயிரத்துடன் கூடிய தமிழர் திருநாள் ‘பொங்கல்’ பரிசுத் தொகுப்பு! : திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!
-
“‘தான் திருடி, பிறரை நம்பார்’ என்பதைப் போன்றவர்தான் எடப்பாடி பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!