India

“பேசாமல் எங்களைக் கடலில் தள்ளிக் கொன்று விடுங்கள்” : குடியுரிமை மறுக்கப்பட்ட இலங்கை அகதிகள் வேதனை!

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க கடந்த ஆட்சியில் நிறைவேற்ற முடியாமல் போன குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை, பெரும்பான்மை பலத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் அமல்படுத்தப்பட்ட இந்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திரிபுரா மற்றும் அசாம் மாநில மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து நாடு முழுவதும் உள்ள ஜனநாயக அமைப்பினர் மோடி அரசிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மசோதாவில் 30 ஆண்டுகளாக இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கை மக்களுக்கு குடியுரிமை பற்றிய எவ்வித அம்சமும் இல்லை.

குறிப்பாக தமிழ்நாட்டில் 107 முகாம்களில் வசிக்கும் 59,714 இலங்கை அகதிகளின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் பி.பி.சி செய்தித்தளம் நேரில் சென்று இலங்கைத் தமிழ் மக்களின் கருத்துகளைக் கேட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் இலங்கை அகதி ஒருவர், ”கடந்த 30 ஆண்டுகளாக எங்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யாமல் குடியுரிமை மறுப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “எங்களுக்கு குழந்தை பிறந்ததும் இங்கு வந்தோம். அவர்கள் தற்போது பட்டம் பெற்றுவிட்டார்கள். ஆனால் குடியுரிமை இல்லாததால் பட்டம் பெற்றும், தகுதியிருந்தும் அரசு வேலைக்குப் போக முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. மற்ற நாடுகளுக்கு அகதிகளாகச் சென்ற எங்கள் மக்களுக்கு அந்நாட்டு அரசு குடியுரிமை வழங்கியுள்ளது.

ஆனால் இன்னும் இந்திய அரசாங்கம் அதுகுறித்து பரிசீலனை கூட செய்யவில்லை. நாங்கள் இலங்கையில் இருந்தால் தமிழர் என அடிக்கிறார்கள். இங்கு வந்தால் அகதிகள் என ஒதுக்குகிறார்கள். அதனால் தான் அங்கிருந்த வேதனைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் இந்தியா வந்தோம். ஆனாலும் இங்கும் அதே வேதனை தொடருகிறது.

கோப்பு படம்

குறிப்பாக, நங்கள் பள்ளிக்கூடம் சென்றாலும் அகதி, மருத்துவமனை சென்றாலும் அகதி. எங்கே என்றாலும் அகதி என்றால் வேறு எங்குதான் செல்வது? குடியுரிமை இனி இல்லையென்றால், பேசாமல் எங்கள் அனைவரையும் கப்பலில் அழைத்துச் சென்று கடலில் தள்ளிக் கொன்று விடுங்கள்” எனக் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

Also Read: ''இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படாது'' - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!