India

பெரும்பான்மை இருப்பதற்காக சிறுபான்மையினரை துன்புறுத்தலாம் என அர்த்தமில்லை - மக்களவையில் சீறிய கனிமொழி!

பா.ஜ.க ஆட்சி அமைத்த நாள் முதற்கொண்டு நாட்டு மக்களுக்கு எதிரான பல சட்டங்களையும், சட்டத்திருத்தங்களையுமே மேற்கொண்டு வருகிறது

குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினரை பாதிக்கும் வகையிலான சட்டங்களையே இயற்றி வருகிறது மோடியின் மத்திய அரசு. காஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவுகள் ரத்து, குடியுரிமை சட்ட மசோதா என பலவற்றை உதாரணமாக கூறலாம்

இந்நிலையில், ஆங்கிலோ இந்தியன் இடஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கான மசோதாவையும் மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளது பா.ஜ.க அரசு. இதனை எதிர்த்து பேசிய தி.மு.க மக்களவை குழுத் துணைதலைவர் கனிமொழி, ஆங்கிலோ இந்தியன் இடஒதுக்கீடு ரத்து செய்யும் மசோதா அடிப்படை உரிமைகளை பறிக்கிறது என்றார்

13 மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவையில் ஆங்கிலோ இந்தியன் பிரிவைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தென் மாநிலங்களில் மட்டும் 5 ஆங்கிலோ இந்தியன் சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என சுட்டிக்காட்டினார் கனிமொழி.

இந்த மசோதவை கொண்டு வருவதற்கு முன்பு மேற்குறிப்பிட்ட மாநிலங்களின் அரசுகளிடம் ஆலோசிக்கப்பட்டதா என கேள்வி எழுப்பினார். அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக தங்களது பங்கை செலுத்தி வருகின்றனர். ரயில்வே மற்றும் அரசு துறைகளிலும் அவர்களின் பங்களிப்பு உள்ளது எனவும் கனிமொழி குறிப்பிட்டார்.

பா.ஜ.க., அரசுக்கு மக்களவையில் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக சிறுபான்மையினரை துன்புறுத்த வேண்டும் என்று அர்த்தமில்லை. குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்களுக்கு என்றால், ஆங்கிலோ இந்தியன் இட ஒதுக்கீடு ரத்து கிறிஸ்துவர்களுக்கானது. ஜனநாயகம் என்பது அனைத்து சமூக மக்களையும் உள்ளடக்கியதுதான் என்றும் கனிமொழி பேசியுள்ளார்.