India

குடியுரிமை திருத்த மசோதா எம்.பி.,க்கள் வாக்களித்ததில் குளறுபடி ? : உண்மைத் தகவலை அரசு வெளியிடுமா ?

குடியுரிமை திருத்த மசோதா மீது மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றபோது, தி.மு.க உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்புச் செய்ததாக, தவறான தகவல் பரவி, விமர்சனங்கள் எழுந்தன. நள்ளிரவில் நடைபெற்ற இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு குறித்த தெளிவான செய்திகள் எந்த ஊடகங்களிலும் வெளிவரவில்லை.

இதுகுறித்து நேற்று இரவு தி.மு.க எம்.பி., கனிமொழி , “குடியுரிமை சட்டத் திருத்த மசோதா 2019 இஸ்லாமியர்களுக்கு எதிரானது. தி.மு.க என்றைக்கும் சிறுபான்மையினரை கைவிடாது. டிசம்பர் 10ம் தேதி அன்று பாராளுமன்றத்தில் தி.மு.க உறுப்பினர்கள் இம்மசோதா மீதான விவாதம் முடியும் வரை இருந்து, தி.மு.க தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர். நாங்கள் வெளிநடப்புச் செய்தோம் என்ற பொய்ப் பிரச்சாரம் அரசியல் காழ்ப்புணர்ச்சி” என விளக்கமளித்தார்.

இந்நிலையில், உண்மைக்குப் புறம்பான இந்தத் தகவல் எப்படி பரவியது என BBC தமிழ் ஊடகவியலாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவின் சுருக்கம் பின்வருமாறு :

“குடியுரிமை திருத்த மசோதா திங்கட்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டபோது, ஆதரவாக 311 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் பதிவாயின. எதிர்க்கட்சியினரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், எப்படி 80 வாக்குகள் மட்டுமே எதிராகப் பதிவாயின, யார் ஓட்டுப் போடவில்லை என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஒரு கட்டத்தில், தி.மு.க. இந்த மசோதாவை எதிர்த்தாலும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்புச் செய்துவிட்டது என மூத்த பத்திரிகையாளர்களே எழுத ஆரம்பித்தார்கள்.

இத்தனைக்கும் முந்தைய நாள் இரவு, தொலைக்காட்சியில் நேரலையாக நடந்த நிகழ்வில், என்ன நடந்தது என்பதில் இவ்வளவு குழப்பம். மக்களவை உறுப்பினர்களிடம் கேட்டால், "ஏன் தி.மு.க.தான் எதிர்த்து வாக்களித்ததே" என்கிறார்கள்.

எந்தப் பத்திரிகையிலும் எந்தக் கட்சியெல்லாம் எதிர்த்து வாக்களித்தார்கள், எந்தக் கட்சியெல்லாம் ஆதரித்து வாக்களித்தார்கள் என்ற விவரங்கள் இல்லை.

முரசொலியில் வந்த செய்தி, "குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா குறைபாடுடையது! மக்களவையில் டி.ஆர். பாலு பேச்சு! தி.மு.க. வெளிநடப்பு!" என்றிருந்தது.

ஆகவே, தி.மு.க வெளிநடப்பு செய்ததற்கு முரசொலியே ஆதாரமாக இருந்தது. ஆனால், எதிர்த்து வாக்களித்ததற்கு ஒரு ஆதாரமும் இல்லை. இது தவிர, தாங்கள் வெளிநடப்புச் செய்வதாக டி.ஆர்.பாலு பேசிய உரையும் சமூக வலைதளங்களில் வலம் வந்தது.

உண்மையில் என்ன நடந்தது?

வாக்களிப்பில் தி.மு.க. எம்.பிக்கள் கலந்துகொண்டு எதிர்த்து வாக்களித்திருக்கிறார்கள். ஆனால், மக்களவையில் உள்ள எலெக்ட்ரானிக் வாக்களிக்கும் ஸ்விட்சுகளில் ஏகப்பட்ட பிரச்னைகள். பலரது வாக்குகள் பதிவாகவேயில்லை என்கிறார்கள் எம்.பி.,க்கள். இந்த 311-80 என்பது பதிவான வாக்குகளில் ஆதரவு - எதிர்ப்பு விகிதம்தான். உண்மையிலேயே எவ்வளவு ஆதரவு, எவ்வளவு பேர் எதிர்ப்பு என்பது யாருக்கும் தெரியாது.

இந்தக் குழப்பத்திற்குப் பிறகு, வாக்குகள் பதிவாகாதவர்களுக்கு தனியாக வாக்குச் சீட்டுகள் கொடுத்து வாக்குகள் பதிவுசெய்யப்பட்டன. அவற்றின் முடிவுகள் இன்னும் யாருக்கும் தெரியாது.

லோக்சபா நடவடிக்கைகளுக்கென ஒரு இணையதளம் இருக்கிறது. அதில் மக்களவையின் ஒவ்வொரு மணி நேரமும் யார் என்ன செய்தார்கள் என தகவல்கள் இருக்கும். இந்தக் குறிப்பிட்ட டிசம்பர் 9ஆம் தேதியன்று, மக்களவை இணையதளத்தில் இரவு 10-11வரை என்ன நடைபெற்றது என்ற தகவல்கள் இருக்கின்றன. 11-12 மணியளவில் என்ன நடந்தது என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை. இந்த 11 -12 மணியளவில்தான் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்தத் தகவல் லோக் சபா இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்டால், எந்தக் கட்சி யாருக்கு வாக்களித்தது என்பதில் தெளிவு வரும்.

எல்லோர் கண் முன்பும் நடந்த ஒரு நிகழ்வு செய்தியாகப் பதிவாவதில் இவ்வளவு குழப்பம்!”

- காசி விஸ்வநாதன், பத்திரிகையாளர்.

Also Read: “உங்கள் சிந்தனை முஸ்லிம்களை வெறுப்பதில்தான் உள்ளது”: குடியுரிமை மசோதாவுக்கு எதிராக தி.மு.க எம்.பி ஆவேசம்!