India

''நித்யானந்தா எங்கு இருக்கிறார்னு தெரியல'' : மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா சாமியார். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இவரது ஆசிரமத்தின் கிளைகள் உள்ளன.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் புறநகர் பகுதியான ஹிராபூரில் உள்ள கிளையில், 4 குழந்தைகளை சட்டவிரோதமாக தங்க வைத்து இருந்ததாகவும், நன்கொடை வசூலிக்க வைத்து அவர்களை சித்ரவதை செய்ததாகவும் புகார் எழுந்தது.

இந்த புகார் தொடர்பாக நித்யானந்தா, அவரது பெண் சீடர்கள் மீது ஆமதாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து நித்யானந்தாவை குஜராத் போலிஸார் தேடி வந்தனர்.

Also Read: “தனி நாடு, தனி சின்னம், தனி பாஸ்போர்ட்” - தேடப்படும் குற்றவாளி நித்தியானந்தாவின் ‘பகீர்’ திட்டம்!

இந்நிலையில், ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி 'கைலாசா' என்ற நாட்டை உருவாக்குவதாகவும், அதை எல்லைகள் அற்ற இந்து நாடாக அமைக்க நித்தியானந்தா முயற்சித்து வருவதாகவும் கூறப்பட்டது.

ஈகுவடாரில் நித்யானந்தா தனிநாடு உருவாக்கியுள்ளதாக வெளியான தகவலை ஈக்வடார் நாடு திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், அவர் ஹைதி நாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாகவும் ஈக்வடார் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவிஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு முன்பே முடக்கப்பட்டுள்ளது.

புதிய பாஸ்போட்டுக்கு விண்ணப்பித்திருந்தாலும் அது நிராகரிக்கப்பட்டு விட்டது. தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் இல்லை. அவர் குறித்த தகவல்கள் கிடைத்தால் உடனே தெரிவிக்கும்படி உலக நாடுகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஈக்வடாரில் நித்தியானந்தா இல்லை என்று அந்த நாடு மறுத்துள்ளது. கைலாஷா என்று ஒரு இணைய தளத்தை வேண்டுமானால் நித்யானந்தா உருவாக்கலாம். ஆனால் நிஜத்தில் அது இயலாது’’ எனத் தெரிவித்தார்.