India

“என்கவுன்டர்களை ஆதரிக்கும் மனநிலைக்குப் பின்னே...” - மனித உரிமை ஆர்வலர்கள் சொல்வது என்ன?

தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, கொன்று உடலை தீவைத்து எரித்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் போலிஸாரால் என்கவுன்டரில் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனர். என்கவுன்டரை சட்டம் மறுத்தாலும், பெரும்பான்மையான மக்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

அதேநேரத்தில், தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை காவல்துறையினரால் இதுபோல தண்டிக்க முடியுமா, அல்லது அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையாவது எடுக்க முடியுமா எனவும் தமிழக மக்கள் குமுறி வருகின்றனர்.

பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்களை ஆபாசப்படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் ஆளும்கட்சி தொடர்புடையவர்கள் என்பதால் அவர்கள் மீதான குண்டர் சட்டம் கூட ரத்து செய்யப்பட்டுள்ளது. எனில், இதுபோன்ற ‘என்கவுன்டர்கள்’ யாருக்கு ஆதரவானவை எனும் கேள்வியும் எழுகிறது.

சமூக பொருளாதார ரீதியில், கீழ்மட்டத்திலுள்ள மக்களின் மீது எப்போதும் கடுமையைப் பிரயோகிக்கும் அரசும், காவல்துறையும், சமூகத்தில் பணபலம், அதிகாரபலம் படைத்தவர்களை பாதுகாக்கத் துடிப்பதைச் சுட்டிக்காட்டி பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை மிகக் கடுமையாக தண்டிக்கவேண்டும் எனும் மனநிலை பொதுவாகவே உருவாவதுதான். அந்த நிலையிலிருந்துதான், தெலங்கானா போலிஸாரின் இந்த என்கவுன்டரை வெகுமக்கள் ஆதரிக்கின்றனர்.

ஆனால், இத்தகைய என்கவுன்டர்கள் கொண்டாடத்தக்கவை அல்ல என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். இரக்கமற்ற முறையில் நால்வர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது அரசின் சட்டம் ஒழுங்கில் ஏற்பட்டுள்ள தோல்வியை மறைக்கத்தான். இதன்மூலம் நீதி நிலைநாட்டப்பட்டு விட்டது என்பதை ஏற்கமுடியாது என்பது அவர்களின் வாதம்.

மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் தண்டனை வழங்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு நீதிமன்றம் தான். எத்தகைய குற்றங்கள் செய்தவராயினும், நீதிமன்றம் மூலம் தீர்வு பெறுவதையே சட்டம் பரிந்துரைக்கிறது. சட்டவிரோதமான என்கவுன்டர் முறைகள் குற்றங்களை குறைக்க ஒருபோதும் உதவாது என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது.

இதை உணர்த்தும் வகையில் எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான தஸ்லிமா நஸ்ரின் ஒரு கருத்தை முன்வைக்கிறார். அதில், “மக்கள் வன்முறையை விரும்புகிறார்கள்; எனவேதான் நீங்கள் பாலியல் வன்கொடுமைக்குத் தீர்வாக குற்றவாளிகளை தூக்கிலிடவோ, கூட்டாக அடித்துக் கொலை செய்யவோ, குறியறுக்கவோ பரிந்துரைத்தால் அந்த யோசனையை மக்கள் விரும்புகிறார்கள்.

ஆனால் ஆணாதிக்கத்திற்கு எதிராகவும், பெண் வெறுப்புக்கு எதிராகவும், பெண்களை ஒடுக்குவதற்கு எதிராகவும் ஆண்களுக்கு விழிப்புணர்வூட்ட நினைத்தால் மக்கள் அதை விரும்புவதில்லை.” எனத் தெரிவிக்கிறார்.

Also Read: “என் மகளின் ஆன்மா சாந்தியடையும்” : என்கவுன்டர் குறித்து பிரியங்காவின் தந்தை உருக்கம்!