India

“எங்களுக்கு நேர்ந்தது ஐதராபாத் பெண்ணுக்கும் நிகழவேண்டாம்” - நிர்பயாவின் தாயார் வேதனை!

நிர்பயா வழக்கில் தாமதமாக நீதி வழங்கியதைப் போல் இல்லாமல், ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொலை வழக்கில் விரைவாக நீதி வழங்க வேண்டும் என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு, 23 வயதான மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, பேருந்திலிருந்து வீசப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் அந்த மாணவியின் பெயர் வெளியிடப்படாமல் நிர்பயா என்றே குறிப்பிடப்பட்டது.

நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பை உறுதி செய்தன. ஆனால், மரண தண்டனை அளிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு இன்னும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. குற்றவாளிகளில் ஒருவரான வினய் சிங் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி டெல்லி துணை நிலை ஆளுநருக்கு கருணை மனு அளித்தார்.

இந்நிலையில், இதுகுறித்து நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி நிருபர்களிடம் பேசும்போது, “எனது மகள் பாதிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளில் ஒருவர் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி தாக்கல் செய்த கருணை மனுவை நிராகரிக்கக் கோரி டெல்லி அரசு துணை ஆளுநருக்குப் பரிந்துரை செய்ததை வரவேற்கிறேன். குற்றவாளிகள் 5 பேரும் விரைவில் தூக்கிலிடப்படுவார்கள் என்று நம்புகிறேன்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவாக நீதி வழங்கப்பட வேண்டும். நீதி பெறுவதில் ஏராளமான தாமதம் இருந்து வருகிறது. இதுபோன்று தாமதங்கள் இருந்தால், சமூகத்தில் என் மகளைப் போன்று மற்ற மகள்களும் பாதிக்கப்படுவார்கள். நீதித்துறை தனது நீதிபரிபாலனத்தை இன்னும் விரைவாக, கட்டுக்கோப்புடன் செய்யவேண்டும்.

ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆனால், அதைச் செய்தவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். இது சமூகத்துக்கு தவறான கருத்தைச் சொல்லும்.

எங்களுக்கு 7 ஆண்டுகள் போராடி நீதி கிடைத்தது போன்று ஐதராபாத் பெண்ணுக்கு நேரக்கூடாது. ஏன் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நாட்டில் நிகழ்கின்றன என்பதை ஆட்சியாளர்கள் கண்டறிய வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

Also Read: ரோஜா பாலியல் வன்கொலையில் இன்னும் குற்றவாளிகளை தேடும் போலிஸார்... பொதுச்சமூகம் ‘கள்ள மவுனம்’ காப்பது ஏன்?