India

“உள்ளாட்சி தேர்தல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்” - உச்சநீதிமன்றத்தில் தி.மு.க கோரிக்கை!

தமிழகத்தில், 8 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் சரியாக நடத்தப்பட்டால்தான் ஊரகப் பகுதி உள்ளிட்ட அனைத்து குடிமக்களுக்கும் அரசின் எல்லா திட்டங்களும் சரியாகச் சென்றடையும் என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், தோல்வி பயத்தால் தள்ளிப்போட்டு வருகிறது அ.தி.மு.க அரசு.

இதுதொடர்பான வழக்கில், 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஏற்கனவே தொகுதி மறுவரையறை, இடஒதுக்கீடு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தி.மு.க தொடர்ந்த மனுவின் மீது இன்னும் இறுதி தீர்ப்பு வராத நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தொகுதி வரையறை முழுமையாக முடிந்த பின்னரே தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது தி.மு.க.

இந்நிலையில் இன்று தி.மு.க மீண்டும் உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையிட்டுள்ளது. தி.மு.க தனது மனுவில் தொகுதி, வார்டு வரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். அதன்பிறகே தேர்தல் அறிவிக்கை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த மனுவை விரைந்து விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் உறுதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை கோரி புதிதாக ஆறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுக்களும் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு போன்ற காரணங்களுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறைமுகத் தேர்தல்: தோல்வி பயமே காரணம் - தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்!