India

பசு கடத்தியதாக கூறி இஸ்லாமிய இளைஞர்கள் மீது இந்துத்வா கும்பல் கொலைவெறித் தாக்குதல் : இருவர் படுகொலை!

பிரதமர் மோடி 2014ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடும் கும்பல்களின் அராஜகம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் அக்லாக் என்னும் பகுதியில் முதியவர் ஒருவர் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி அவரை அடித்தே கொன்றனர்.

இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் எழுந்தன. ஆனாலும், பசு பாதுகாவலர்கள் தங்கள் போக்கினை மாற்றிக்கொள்ளாமல் உள்ளனர். இரண்டாவது முறையாக பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பேற்றதும் மீண்டும் இந்துத்துவா கும்பலின் வன்முறை வெறியாட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், கூச்பிகார் பகுதி வழியாக, 2 பசுமாடுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேனில் தின்ஹாட்டாவில் உள்ள ஒக்ராபரி பகுதியை சேர்ந்த ரபியுல் இஸ்லாம் என்ற முஸ்லிம் இளைஞர் ஒருவரும், அவருடன் பிரகாஷ் என்பவரும் சென்றுள்ளனர். இதனைக் கண்ட இத்துத்துவா கும்பல் ஒன்று அந்த வாகனத்தை வழிமறித்து வேனில் சென்ற இருவரையும் விசாரித்துள்ளனர்.

பின்னர், பசுவைக் கடத்துகிறீர்களா என்று கூறி, பிரகாஷையும், ரபியுல் இஸ்லாமையும் வேனில் இருந்து கீழே தள்ளிய அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் மூங்கில் கம்புகள், லத்தி மற்றும் இரும்புக் கம்பிகளால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். வேனுக்கும் தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

பிறகு நீண்டநேரத்திற்குப் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு ரபியுலையும், பிரகாஷையும் பரிசோத்த மருத்துவர்கள் ஏற்கனவே இருவரும் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

பின்னர், தகவலறிந்து வந்த அவர்களது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குற்றவாளிகள் மீது கைது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். பின்னர் மாவட்ட அரசு அதிகாரிகள் சமாதானம் செய்து உடலைக் கொடுத்து அனுப்பினார்கள். இதுதொடர்பாக 12 பேரை போலிஸார் தற்போது கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.