India

“இந்திய பொருளாதாரம் இருள் சூழ்ந்து காணப்படுவது தெளிவாகியுள்ளது” - மு.க.ஸ்டாலின் ட்வீட்!

இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் நுகர்வோர் செலவினம் வீழ்ச்சியடைந்துள்ளதாக Business Standard ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் தவறான பொருளாதார கொள்கையால் இந்திய பொருளாதாரம் கடுமையாகச் சரிந்து வருகிறது. சிறு-குறு தொழில்கள் முற்றிலும் முடங்கியுள்ளன. இதனால், மக்கள் தங்களின் நுகர்வுகளை வெகுவாகக் குறைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நாடுமுழுவதும் கடந்த 2011-12ம் ஆண்டில் ஒரு மாதத்தில் தனிநபர் செலவழித்த தொகை 1,501 ரூபாய். ஆனால் 2017-18-ம் ஆண்டில் ஒரு மாதத்திற்கு தனிநபர் செலவழித்த தொகை 1,446 ரூபாய். இது 2011-12 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.7 சதவீதம் அளவிற்கு குறைவு என்று சுட்டிக்காட்டியுள்ளது பிஸினஸ் ஸ்டாண்டர்டு.

இந்திய மக்கள் சாப்பிடுவதற்கான செலவையும் குறைந்துள்ளனர். நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டிருக்கும் வேளையில் இந்த செலவுத்தொகை குறைப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “NSO நுகர்வோர் செலவினம் குறித்த தரவு இந்தியாவில் மோசமான பொருளாதார நிலைமை நிலவுவதைச் சுட்டிக்காட்டுகிறது. இந்திய பொருளாதாரம் இருள் சூழ்ந்து காணப்படுவதை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது.

நுகர்வோர் செலவினம் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தவேண்டும். கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் மத்திய அரசு ஈடுபடவேண்டும்” என வலியுறுத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின்.