India
தொடங்கிய 10 மாதங்களில் ஹரியானாவில் ஆட்சியைத் தீர்மானிக்கும் அளவுக்கு வளர்ந்த ஜேஜேபி..யார் இந்த துஷ்யந்த்?
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் இழுபறி ஏற்பட்டிருக்கும் சூழலில், தொடங்கி 319 நாட்களே ஆன ஜனநாயக ஜனதா கட்சி ஆட்சியை தீர்மானிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் கடந்த 21ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் உள்ளிட்ட கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.
ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பெரும்பான்மை பெற 46 தொகுதிகள் தேவை. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க 38 இடங்களிலும், காங்கிரஸ் 33 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
முடிவுகள் விரைவில் தெரியவரவிருக்கும் நிலையில், பா,ஜ.க-வை விட ஒருசில இடங்களே பின்தங்கியிருக்கும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்ற ஜனநாயக ஜனதா கட்சியின் ஆதரவைக் கோரி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிகக்குறுகிய காலத்தில் ஹரியானாவில் ஆளும் அரசை தீர்மானிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ள ஜனநாயக ஜனதா கட்சி (JJP) அரசியல் நோக்கர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
JJP தலைவர் துஷ்யந்த் சவுதாலா, இந்திய தேசிய லோக்தள கட்சி (INLD) தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரன். அமெரிக்காவில் வணிக நிர்வாகம் படித்தவர். நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் முன்னாள் ஹரியானா முதல்வர் பஜன்லாலின் மகன் குல்தீப் பிஷ்னாயை தோற்கடித்தார் துஷ்யந்த். மேலும், துஷ்யந்த் கடந்த 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வென்று நாட்டின் மிக இளம் வயது (26) எம்.பி-யாக சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்ப மோதல் காரணமாக இந்திய தேசிய லோக்தள கட்சியில் இருந்து வெளியேறிய துஷ்யந்த் 10 மாதங்களுக்கு முன்னர் ஜனநாயக ஜனதா கட்சியை தொடங்கினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கப்பட்ட ஜனநாயக ஜனதா கட்சி, இந்தத் தேர்தலில், தாய்க்கட்சியான இந்திய தேசிய லோக்தள கட்சியை விடவும், அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருவது பலரும் புருவத்தை உயர்த்தச் செய்துள்ளது.
கட்சி தொடங்கியது முதல் பல்வேறு பேரணிகளை நடத்தி மக்களைச் சந்தித்து வந்தார் துஷ்யந்த் சவுதாலா. அதன் காரணமாகவே குறுகிய காலத்தில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சியைத் தீர்மானிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார் துஷ்யந்த்.
பா.ஜ.க ஆட்சியைப் பிடிப்பதைத் தடுக்க, காங்கிரஸ் கட்சி, துஷ்யந்துக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் துஷ்யந்திரம் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறப்படுகிறது.
Also Read
-
“தமிழ்நாட்டின் நிதிப் பொறுப்பும் பட்ஜெட் மேலாண்மையும் கட்டமைப்பிற்குள் உள்ளது” : இந்து நாளேடு பாராட்டு!
-
தஞ்சையில் அடுத்த மகளிர் அணி மாநாடு! - தயாராகும் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” : முழு விவரம் உள்ளே!
-
“மதவாத அரசியல் போதையை தடுத்திட நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும்!” : திருச்சியில் முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு 21 லட்சம் வாகனங்கள் பதிவு : கடந்த ஆண்டை விட 8.4% வாகனங்கள் விற்பனை!
-
2025 ஆம் ஆண்டில் 2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!