India

“இந்தியாவில் 5 வயதிற்குள் 69% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் மரணம்”: யுனிசெப் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

சுதந்திர இந்தியாவில் இன்னும் பலருக்கு மூன்று வேளை உணவு கூட கிடைக்காத அவலநிலை நீடிக்கிறது. மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசால் இந்தியாவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், குழந்தைகளுக்கு போதிய உணவு இல்லாமல் ஊட்டச்சத்து பாதிப்பு ஏற்பட்டு இறப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, இரண்டாவது முறையாக ஆட்சி செய்துவரும் பா.ஜ.க அரசால் நாட்டு மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. ஆட்டோமொபைல், விவசாயத்துறை என அனைத்து துறைகளுமே மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றன.

இந்த பின்னடைவினால் கோடிக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். பல மாநிலங்களில் உணவு கிடைக்காமல், மக்கள் பசியால் இறந்துபோகும் அவல நிலை உருவாகியுள்ளது.

அரசு சார்பில் குழந்தைகளுக்கு வழங்கும் சத்துணவு கூட வட மாநிலங்களில் முறையாக வழங்கப்படவில்லை. அது தொடர்பான புகார்கள் ஊடகங்களில் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மரணத்தில் 69 சதவிகிதம் ஊட்டத் சத்து குறைவால் நிகழ்வதாக யுனிசெஃப்’ தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் போதிய ஊட்டச்சத்து மற்றும் உணவு கிடைக்காமல் இறக்கும் குழந்தைகள் பற்றிய அறிக்கையை, கடந்த அக்டோபர் 15-ம் தேதி ‘யுனிசெஃப்’ அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதில், உலகம் முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பில் 65 சதவிகிதம் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படுவதாகவும், இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மரணத்தில், 69 சதவிகிதம் ஊட்டத்சத்து குறைவால் நிகழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கடந்த 2018-ம் ஆண்டில் இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு 8 லட்சத்து 82 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதேபோல் வறுமையில் வாடும் நைஜீரியாவில் குழந்தைகளின் இறப்பு 8 லட்சத்து 66 ஆயிரம் எனவும், பாகிஸ்தானில் 4 லட்சத்து 9 ஆயிரம் இறப்புகள் என பதிவாகியுள்ளன. உலகிலேயே இந்தியாவில் தான் அதிக குழந்தைகள் உயிரிழந்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

இந்தியாவில் உள்ள குழந்தைகளில் குறைந்த எடை, அதிக எடை, ஊட்டச்சத்து குறைபாடுஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். தெற்கு ஆசியாவிலேயே இவற்றை கட்டுப்படுத்துவதில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் மூன்றில் இரண்டு குழந்தைகளுக்கு அவர்களின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கான உணவுகள் வழங்கப்படுவதில்லை” என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் 6 முதல் 23 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளில் 42 சதவீதம் குழந்தைகளுக்கு மட்டுமே போதுமான உணவளிக்கப் படுவதாகவும், அதிலும் 21 சதவீதம் பேர் மட்டுமே சரியான மாறுபட்ட உணவைப் பெறுகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் 6 முதல் 8 மாத குழந்தைகளில் 53 சதவிகிதத்தினருக்கு மட்டுமே சரியான நேரத்தில் உணவளிக்கப்படுவதாக யுனிசெஃப் சுட்டிக்காட்டியது. மேலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.

அதுமட்டுமல்லாமல், மேற்கூறிய வயதிற்குட்பட்ட ஒவ்வொரு ஐந்து வயது குழந்தைக்கும் வைட்டமின் ஏ குறைபாடு இருப்பதாகவும், ஒவ்வொரு மூன்று வயது குழந்தைகளுக்கும் வைட்டமின் பி 12 குறைபாடு இருப்பதாகவும், இதில் ஐந்தில் இரண்டு பேருக்கு இரத்த சோகை இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த புள்ளிவிவரம் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசின் மோசமான செயல்திட்ட நடவடிக்கைகளினால் இத்தகைய பாதிப்புகளை இந்தியாவில் உள்ள ஏழை மக்கள் நித்தமும் அனுபவித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.