India

“பா.ஜ.கவினரின் அப்பட்டமான நேரு வெறுப்புக்குக் காரணம் இதுதானா?” - சான்று தரும் புத்தகம்!

பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க-வினர் எப்போதுமே நேரு வெறுப்பைக் கையாண்டு வருகின்றனர். முன்னாள் பிரதமர் நேருவின் நடவடிக்கைகளைக் குறை சொல்வதை அக்கட்சியைச் சேர்ந்த பலரும் வாடிக்கையாக வைத்துள்ளனர். பா.ஜ.க அரசின் குறைபாடுகளை மறைக்க நேருவை விமர்சிப்பது அக்கட்சியினரின் வழக்கம். நேரு, பா.ஜ.க-வின் தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸை கடுமையாக எதிர்த்ததன் காரணமாகவே அவர்கள் நேரு வெறுப்பைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பா.ஜ.க-வினரின் நேரு மீதான இத்தகைய வன்மத்திற்குக் காரணம் என்ன என்கிற ரீதியில், ஃப்ரன்ட்லைன் இதழ் ஆசிரியர் விஜயசங்கர் ஃபேஸ்புக் பதிவொன்றை எழுதியுள்ளார். அதில், ஏ.ஜி. நூரானியின் புத்தகத்திலிருந்து தமிழில் தான் மொழிபெயர்த்த புத்தகத்தின் குறிப்பிட்ட பகுதியைப் பகிர்ந்துள்ளார் விஜயசங்கர். அது பின்வருமாறு :

“டிசம்பர் 7, 1947 அன்று மாகாணங்களின் பிரதம அமைச்சர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் நேரு பின்வரும் எச்சரிக்கையை விடுத்தார்:

“ஆர்.எஸ்.எஸ். ஒரு தனி ராணுவத்தின் தன்மை கொண்டதென்றும், நாஜி அமைப்புகளின் செயல்முறைகளையே பின்பற்றும் அளவுக்கு நாஜிய வழிகளில் நிச்சயமாகச் செல்கிறது என்றும் காட்டுவதற்கு நம்மிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளன. குடியுரிமைகளில் தலையிடுவதில் நமக்கு விருப்பமில்லை. ஆனால் ஆயுதங்களைப் பயன்படுத்தும் நோக்கில் பெருமளவிலான ஆட்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுப்பதை நாம் ஊக்குவிக்க முடியாது.


“ஜெர்மனியில் நாஜி இயக்கம் எப்படி வளர்ந்தது எனக்கு ஓரளவு தெரியும். பொதுவாக அதிக புத்திசாலித்தனம் இல்லாத, வாழ்க்கையில் எதுவும் கிடைக்காதது போன்ற நிலையிலுள்ள குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான கீழ் நடுத்தர வர்க்க இளைஞர்களையும், பெண்களையும் மேலோட்டமான அலங்காரங்களைக் காட்டியும், கறாரான கட்டுப்பாட்டை வளர்ப்பதாகச் சொல்லியும் நாஜி அமைப்பு ஈர்த்தது. நாஜி அமைப்பின் கொள்கைகளும் செயல்பாடுகளும் எளிமையாகவும், எதிர்மறையாகவும், அதிகமாக மூளையைப் பயன்படுத்தத் தேவையில்லாதவையாகவும் இருப்பதால் அந்த இளைஞர்களும் நாஜிக் கட்சியை நோக்கி நகர்ந்தனர். நாஜிக் கட்சி ஜெர்மனியை அழிவுக்கு இட்டுச் சென்றது.

இத்தைகைய சிந்தனைப் போக்குகள் இந்தியாவில் பரவி, வளர நாம் அனுமதித்தால், அவை நாட்டிற்கு பெரும் சேதத்தை விளைவிக்குமென்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. நிச்சயமாக இதிலிருந்து இந்தியா தப்பிப் பிழைத்து விடும். ஆனால் அது மோசமாகக் காயப்பட்டு விடும். அதிலிருந்து குணமடைய நீண்ட காலம் ஆகும்.”